வேட்பு மனுதாக்கல் முதல் நாளே வெறிச்சோடிய அலுவலகங்கள்

வேட்பு மனுதாக்கல் முதல் நாளே வெறிச்சோடிய அலுவலகங்கள்
X

ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்

முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் கோட்டாட்சியா் அலுவலகம் வெறிச்சோடியது.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி, தமிழகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதையொட்டி, வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, வரும் 28ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 30ம் தேதி மாலை 3 மணி வரை மனுக்கள் வாபஸ் பெற அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. 30ம் தேதி மாலை 5 மணிக்கு, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

மேலும், வரும் 23ம் தேதி சனிக்கிழமை வங்கிகள் விடுமுறை என்பதாலும், 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் இரண்டு நாட்கள் மனுதாக்கல் இல்லை. 20 ம் தேதி முதல் 27 ம் தேதிகளுக்கு இடையே மொத்தம் 6 வேலை நாட்களில் மட்டுமே காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.

திருவண்ணாமலை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக கலெக்டர் பாஸ்கரபாண்டியனும், ஆரணி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக டிஆர்ஓ பிரியதர்ஷினியும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 12 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருவண்ணாமலை தொகுதிக்கு திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மந்தாகினியிடமும், ஆரணி தொகுதிக்கு ஆரணி ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ பாலசுப்பிரமணியனிடமும் அளிக்கலாம். அதையொட்டி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறுவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன .

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் முதல் நாள் ஆன நேற்று யாரும் மனு தாக்கல் செய்யாததால் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடியது.

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்வதற்காக 11 மனுக்களை பெற்றுச் சென்றுள்ளதாக தேர்தல் நடத்தும் உதவி அலுவலா் பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

திமுக, அதிமுக வேட்பாளா்கள் பெயா் புதன்கிழமை அன்று வெளியிடப்பட்டுள்ளது. பாமக காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர் பெயரை இன்னும் வெளியிடவில்லை, இன்னும் ஓரிரு நாளில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பெயரை வெளியிடப்படும் தெரிவித்துள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் திங்கட்கிழமை அன்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!