பணியாளர்கள் வராததால் வாகனத்தை இயக்கி குப்பை சேகரித்த கவுன்சிலர்

பணியாளர்கள் வராததால் வாகனத்தை இயக்கி குப்பை சேகரித்த கவுன்சிலர்
X

குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள கவுன்சிலர் சுப்பிரமணியன்

நகராட்சி வார்டில் குப்பைகளை அள்ள பணியாளர்கள் வராததால் வீடுகளுக்கு சென்று கவுன்சிலரே குப்பை சேகரித்தார்.

ஆரணி நகராட்சி வார்டில் குப்பைகளை அள்ள பணியாளர்கள் வராததை கண்டித்து நகர மன்ற திமுக உறுப்பினர் நகராட்சி குப்பை வாகனத்தை இயக்கி வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்ததால் ஆரணியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த மணியும், நகராட்சி ஆணையாளராக குமரனும் உள்ளனர்.

ஆரணி நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளை தினசரி அகற்றுவது கிடையாது என்ற குற்றச்சாட்டு உள்ளது. கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேக்கம் அடைந்துள்ளது. இதனால், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து மலேரியா உள்ளிட்ட நோய் தொற்றுகள் பரவி வருவதாக ஆரணி நகர மக்கள் குற்றஞ்சாட்டு கின்றனர்.

ஆரணி டவுன் நகராட்சி 25 வது வார்டு கவுன்சிலராக திமுகவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் உள்ளார். இந்த வார்டில் முக்கிய சாலையாக சத்தியமூர்த்தி சாலை, மசூதி ,கோவில், மருத்துவமனை, பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் அடங்கிய ஒரு முக்கிய வார்டாகும்.

இப்பகுதி முழுவதும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. நகராட்சி பணியாளர்கள் குப்பைகளை அகற்ற வருவதில்லை என்றும், கடந்த ஒரு வாரமாக குப்பைகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது என இப்பகுதி மக்கள் ஒரு வாரமாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதனை அடுத்து கவுன்சிலர் சுப்பிரமணியன் நகராட்சி ஆணையர் குமரன் அவர்களிடம் எங்கள் வார்டில் குப்பை மேடுகளாக உள்ளதால் நகராட்சி பணியாளர்கள் கொண்டு குப்பையை அகற்ற பலமுறை கோரிக்கை விடுத்தார்.

ஆனால் ஆளுங்கட்சி கவுன்சிலர் கூறியும் ஆரணி நகராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.

இதனால் மனமுடைந்த கவுன்சிலர் சுப்பிரமணியன் தானாக முன்வந்து வார்டுகள் மற்றும் கோவில் மசூதி பள்ளிகள் அருகில் உள்ள இடங்களில் குப்பை வாகனத்தை தானே இயக்கி சென்று குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக குப்பைகளை சேகரித்து சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்தார்.

இதுகுறித்து கவுன்சிலர் கூறுகையில், நகராட்சி ஆணையாளரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சாலையில் தேங்கியுள்ள குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளேன். வீடு, வீடாக சென்று குப்பையை சேகரித்துள்ளேன். கழிவு நீர் கால்வாயில் இருந்த அடைப்புகளையும் சீரமைத்துள்ளேன். இந்த நிலை எனது வார்டில் மட்டுமில்லாமல், நகரம் முழுவதும் உள்ளது' என்றார்.

ஆரணி நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தூய்மை பணியில் ஆளுங்கட்சி நகர மன்ற உறுப்பினர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட சம்பவம் திமுகவினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....