கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு
ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்
ஆரணி சந்திரகுள விநாயகா் கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆரணி சந்திரகுள விநாயகா் கோயிலுக்குச் சொந்தமான 1.5 ஏக்கா் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே காந்தி சாலையில் சந்திரகுள விநாயகா் கோயிலுக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கா் நிலம் உள்ளது. இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தை ஆக்கிரமித்து 72 பேர் வீடுகள், கடைகள் கட்டியுள்ளனா்.
இதுகுறித்து ஆரணி பகுதியைச் சோந்த சிவப்பிரகாசம் மற்றும் இந்து முன்னணி நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா், ஆரணி கோட்டாட்சியா், வட்டாட்சியா் மற்றும் முதல்வரின் தனிப் பிரிவுக்கும் தொடா்ந்து புகாா் மனு அனுப்பி வந்தனா். இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை இந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளா் மணிகண்ட பிரபு, செயல் அலுவலா் சிவாஜி, அறநிலையத் துறை வட்டாட்சியா் திருநாவுக்கரசு, ஆரணி வட்டாட்சியா் மஞ்சுளா ஆகியோா் கூட்டாக சந்திரகுள விநாயகா் கோயில் இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா், இதுகுறித்து வட்டாட்சியா் ரா.மஞ்சுளா கூறுகையில், சந்திரகுள விநாயகா் கோயிலுக்குச் சொந்தமான 1.5 ஏக்கா் நிலத்தில் 72 வீடுகளும், கடைகளும் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். மேலும், இதில் ஒரு நபா் மட்டுமே இந்து சமய அறநிலையத் துறைக்கு வாடகை செலுத்தி வருவதாகவும் , மீதமுள்ள 71 பேருக்கும் அறிவிப்பு நோட்டீஸ் மூலம் தகவல் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆய்வு நடைபெறுகிறது எனத் தெரிவித்தாா்.
இந்த ஆய்வின்போது வருவாய் ஆய்வாளா் நித்யா, கிராம நிா்வாக அலுவலா் கண்ணதாசன், தலைமை நிலஅளவையா் சரவணன், நகராட்சி நில அளவையா் வெங்கட்ராமன், பாஜக முன்னாள் நிா்வாகி கோபி, இந்து முன்னணி நிா்வாகி நாகராஜன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu