ஆரணியில் ரூபாய் 46 லட்சம் முறைகேடு: டாஸ்மாக் மேற்பார்வையாளர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வடுகசாத்து கிராமத்தில் உள்ள 9321 எண் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் 2016 ஆம் ஆண்டு முதல் ஆரணி அருகே சேவூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் (36) என்பவர் மேற்பார்வையாளராக டாஸ்மாக் கடையில் பணி புரிந்து வந்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மதுபானம் விற்பனை செய்யும் பணத்தை மறுநாள் வங்கியில் செலுத்துவது வழக்கமாகும். ஆனால் வடுகசாத்து டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனை செய்யும் பணத்தை கடையில் மேற்பார்வையாளர் அறிவழகன் சரிவர அரசு வங்கி கணக்கில் பணத்தை செலுத்தாமல் 2016 ஜூலை மாதத்திலிருந்து 2018 மார்ச் மாதம் வரை கட்ட வேண்டிய பணத்தை முறையாக கட்டாமல் கையாடல் செய்து வந்துள்ளார். மேலும் வடுகசாத்து டாஸ்மாக் கடையில் ஒருநாளைக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாய் வரையில் விற்பனையாகும்.
திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார் வடுகசாத்து டாஸ்மாக் மதுபானக் கடையில் ஆய்வு செய்தபோது சுமார் 46 லட்ச ரூபாய் மேற்பார்வையாளர் அறிவழகன் கையாடல் செய்தது தெரிய வந்தது. அதுமட்டுமில்லாமல் அறிவழகன் அரசாங்கத்திற்கு மதுபான விற்பனை செய்த புள்ளி விவரத்தையும் தவறாக கொடுத்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து திருவண்ணாமலை டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் அறிவழகன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வடுகசாத்து டாஸ்மார்க் கடை மேலாளர் அறிவழகன் 46 லட்ச ரூபாய் கையாடல் செய்தது தெரியவந்தது. அதன் பிறகு உடனடியாக அறிவழகனை கைது செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர் திருவண்ணாமலை மாவட்டம் போளுரில் உள்ள கிளை சிறையில் அவரை அடைத்தனர்.
மேலும் அறிவழகனிடம் இருந்து 8 லட்ச ரூபாய் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் முறைகேடு நடைபெற்ற டாஸ்மார்க் கடையில் பணிபுரியும் மற்ற ஊழியர்கள் இந்த முறைகேட்டில் சம்பந்தம் உள்ளதா என விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu