ஆரணி அருகே குடிநீர் தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
மேல்நிலை குடிநீர் தொட்டி மீது நின்று மிரட்டல் விடுத்த மதன்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள 12 புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் (வயது 29).இவரது மனைவி யுவராணி. இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். யுவராணி சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்,ஒரு மகன் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் யுவராணி கணவரை பிரிந்து குன்னத்தூரில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
மதன், யுவராணி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து யுவராணி ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மதன் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறியிருந்தார். போலீசார் இது தொடர்பாக மதனை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனைவியுடன் சேர்த்து வைக்க வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இதுதொடர்பாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 12 புத்தூர் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மீது நின்று மதன் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆரணி டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மதனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மனைவியுடன் சேர்த்து வைக்க வேண்டும். அவருடன் சேர்ந்து வாழ வேண்டும். இதற்கு உறுதி அளித்தால் மட்டுமே கீழே இறங்கி வருவேன். இல்லாவிட்டால் குடிநீர் தொட்டியில் இருந்து குதித்து விடுவேன் என மதன் மிரட்டினார்.தொடர்ந்து 2 மணி நேரம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குப் பிறகு சமாதானமான மதன் குடிநீர் தொட்டியில் இருந்து கீழே இறங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu