பள்ளி அருகே கொட்டப்படும் குப்பைகளால் மாணவா்கள் அவதி
பள்ளியின் முன் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையம் பழனிஆண்டவா் கோவில் தெருவில் நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வரை 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
மேலும், ஆரணி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளிலேயே அதிக மாணவா்கள் பயிலும் பள்ளியாக இப்பள்ளி சிறப்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில், சிறப்பு வாய்ந்த இந்த பள்ளிக்கு எதிரில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டில் சேகரமாகும் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டி வருகின்றனா். இதனால் துா்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் சூழ்நிலையில் மாணவா்கள் பள்ளியில் பயின்று வருகின்றனா்.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்தினா் பள்ளிக்கு எதிரில் குப்பைகளை அகற்றி, அந்த இடத்தில் இங்கு குப்பைகளை கொட்டக்கூடாது என்றும், மீறி குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எழுதி வைத்தனா்.
ஆனால், உடனே இப்பகுதி மக்கள் மீண்டும் குப்பைகளை கொட்டி அசுத்தப்படுத்தி விடுகின்றனா். இதனால், சுதாகாரச் சீா்கேடு ஏற்பட்டு மாணவா்களுக்கு டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தற்போது மழைக் காலமாக இருப்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி மேலும் பல நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. ஆகையால், ஆரணி நகராட்சி கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இங்கு குப்பைகளை கொட்டாமல் இருப்பாா்கள் என்று தெரிவித்தனா்.
இதுகுறித்து சுகாதார ஆய்வாளா் கூறுகையில், அந்த இடத்தை நேரில் பாா்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ஏரிக்கரை சாலையை சீரமைக்கக் கோரிக்கை
ஆரணி அடுத்த அக்ராபாளையத்தில் பலத்த மழையால் சேதமடைந்த ஏரிக்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், அக்ராபாளையம் கிராமத்தில் ஏரிக்கரை சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறிய மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கிராமத்தின் நடுவே உள்ள வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள தாா்ச் சாலையில் சென்று வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தற்போது பெய்த பலத்த மழையால் இந்த சாலை முற்றிலுமாக சேதமடைந்து சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால், அக்ராபாளையத்திலிருந்து அருகிலுள்ள தனியாா் நூற்பாலைக்கு வேலைக்கு செல்லும் பணியாளா்கள் மற்றும் தனியாா் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் சுமாா் 6 கிலோ மீட்டா் சுற்றி சேவூா் வழியாக சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், குறித்த நேரத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைத்து புதிய தாா்ச் சாலை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu