பேருந்தை நடுவழியில் நிறுத்திய டிரைவரை கண்டித்து சாலை மறியல்

பேருந்தை நடுவழியில் நிறுத்திய  டிரைவரை கண்டித்து சாலை மறியல்
X

ஆரணியில் மாணவர்கள் நடத்திய சாலை மறியல் 

அதிக மாணவர்கள் ஏறியதால் அரசு பேருந்தை நடுவழியில் நிறுத்திய டிரைவரை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்

ஆரணி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்கள் வசதிக்காக ஆரணியில் இருந்து காலை, மதியம் என இரண்டு வேளையும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கல்லூரி நேரங்களில் அரசு பஸ்சின் இலவச பேருந்து பாஸ் பயன்படுத்தக்கூடிய மாணவர்கள் அதிக அளவில் இருந்தும் ஒரே ஒரு நகர பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இதனை கண்டித்து ஏற்கனவே 3 நாட்கள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட அரசு பேருந்து பணிமனை மேலாளர் அறிவுறுத்தலின்பேரில் கல்லூரி மாணவிகளுக்கும், பெண்களுக்கு என தனி பேருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் மாணவிகளைவிட மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்கள் ஒரு பேருந்தில் செல்ல இடமின்றி படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் செய்ய நேரிடுகிறது.

ஒரே பேருந்தில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறிய நிலையில் ஆரணி இரும்பேடு கங்கா நகர் அருகே செல்லும்போது பேருந்து சக்கரத்தில் இருந்து புகை கிளம்பியது. இதனால் பஸ்சை டிரைவர் அங்கேயே நிறுத்திவிட்டார்.

இதனை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.. தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்கள் தரப்பில் கூறுகையில், ''அதிகமான மாணவர்கள் பஸ்சில் ஏறியதால் பேருந்து எடுக்க முடியவில்லை என டிரைவர் நிறுத்திவிட்டார். இதனால் நாங்கள் கல்லூரிக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாததால் மறியலில் ஈடுபட்டுள்ளோம்'' என்றனர்.

உடனடியாக மற்றொரு பேருந்தை இயக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அப்போது அங்கிருந்த மாணவர்கள் கூறுகையில், 2 பேருந்துகளை விடுங்கள். அதில் அனைத்து மாணவர்களையும் ஏற்ற அனுமதியுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் இதுபோன்ற போராட்டங்களால் உங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தால் உங்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கை செய்து மற்றொரு பேருந்தில் மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்தனர்

Tags

Next Story