குடுகுடுப்பைக்காரர்களுக்கு நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!!

குடுகுடுப்பைக்காரர்களுக்கு நல்ல காலம் பொறக்குது!  நல்ல காலம் பொறக்குது!!
X

மாதிரி படம்

சாதி சான்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஆரணியை சேர்ந்த குடுகுடுப்பைக்காரர்கள் 50 ஆண்டு கனவு நனவாகிறது.

ஆரணி டவுன் பள்ளிக்கூட தெருவில் குடுகுடுப்பைக்காரர்கள் என்றழைக்கப்படும் கணிக்க என்ற சமுதாயத்தை சேர்ந்த மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மூன்று தலைமுறைகளாக சாதி சான்று கேட்டும் சாதி சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை , இதனால் இவர்களுக்கு கல்வி மற்றும் உயர்கல்வி வேலைவாய்ப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இது குறித்து பலமுறை அரசு துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து வந்தனர், முதல்வருக்கு மனு அளித்ததை தொடர்ந்து,. மனு மீது விசாரணை மேற்கொள்ள அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆரணி வட்டாட்சியர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் 280 நபர்களுக்கு கணிகர் என்று ஜாதி சான்று வழங்க கோரி மனு அளித்தனர்.

வட்டாட்சியர் அவரது பிள்ளைகள் பள்ளி மாற்றுச் சான்று, மேலும் வேறு எங்கேயாவது இதுபோன்று சான்று பெற்று உள்ளீர்களா என விசாரித்து, அனைவருக்கும் கணிகர் என ஜாதி சான்று வழங்க வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இதன்பேரில் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து, மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெற்று இவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.

வீதிவீதியாக சென்று ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது என்று குரல் கொடுக்கும் உங்களுக்கு நல்ல காலம் பொறக்குது, சாதி சான்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருது என வட்டாட்சியர் நகைச்சுவையாக தெரிவித்தார்.

Tags

Next Story