ஆரணி குடியிருப்பு பகுதியில் தேக்கிய தண்ணீர்: பொதுமக்கள் அவதி

குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழை நீர்.
ஆரணியில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மாவட்டத்தின் அனேக பகுதிகளில் மழை பெய்து உள்ளது. திருவண்ணாமலையிலும் நேற்று மிதமான மழை பெய்தது.
இதேபோல் ஆரணியில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், இரவு மழையும் பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவு பலத்த மழை பெய்தது. .
ஆரணியில் 85.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக ஆரணி கமண்டல நாக நதி ஆற்றில் சேவூர் பைபாஸ் சாலை அருகே உள்ள தடுப்பனையை மீறி உபரி தண்ணீர் ஆற்றில் வெள்ளப்பெருக்காக ஓடுகிறது.
மேலும் நகரில் தாழ்வான பகுதிகள் மழைநீர் வெள்ளம் போல் சாலைகளில் புரண்டு ஓடியது. பெரும்பாலான பகுதிகளில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால் மழைநீர் சாலையிலே வழிந்து ஓடியது. தற்போது வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல், டெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிகளவில் பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
ஆரணி ஒருங்கிணைந்த ஜெயலட்சுமி நகர், வி.ஏ.கே. நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காலியாக உள்ள இடங்களில் மழைநீர் சூழ்ந்து குளம் போல காணப்படுகிறது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார், லாரி போன்ற வாகனங்கள் தண்ணீரில் மிதக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
வீட்டுக்கு செல்பவர்கள் முழங்கால் அளவு தேங்கி இருக்கும் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது. மேலும் விஷ ஜந்துக்கள் சுலபமாக வீட்டுக்குள் புகுந்து விடும் நிலையும் உள்ளது.
மேலும் ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட தேன் அருவி நகர், பாஸ்கர் நகர் பகுதிகளில் ஆங்காங்கே குலம் போல் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது. தெருவில் உள்ள குப்பைகள் தண்ணீருடன் வீட்டினுள் சென்று விடுகின்றன.
அதேபோல முள்ளிப்பட்டு பைபாஸ் சாலை இணைக்கும் பகுதியில் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி கிடக்கிறது. எனவே, மழைநீர் சூழ்ந்த பகுதிகளிலும், சாலைகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகமும், அந்தந்த ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை பெய்த மழையில் அதிகபட்சமாக ஆரணியில் 85.4 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu