ஆரணியில் இலங்கை தமிழர்கள் திடீர் சாலை மறியல்

ஆரணியில் இலங்கை தமிழர்கள்  திடீர் சாலை மறியல்
X

ஆரணி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் 

தங்களுக்கும் அரசு வீடு கட்டித்தர வேண்டும் எனக்கோரி, ஆரணியில் இலங்கை தமிழர்கள் திடீர் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கமிட்டி வளாகத்தில் 125 குடும்பங்களை சேர்ந்த இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். அங்கு, அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. ஒரே வளாகத்தில் அனைத்துக் குடும்பத்தினரும் கோணிப்பைகள், அட்டைகள், தகரம் ஆகியவற்றால் தடுப்புப்போல் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு இடம் ஒதுக்கி, அதில் வீடு கட்டித்தர வேண்டும் என மாவட்ட கலெக்டரிடமும், தமிழக அகதிகள் முகாம் தலைமை அலுவலகத்திலும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வேலூரில் நேற்று முன்தினம் இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டித்தர அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் ஆரணி-வந்தவாசி சாலையில் மில்லர்ஸ் கூட்ரோடு அருகே இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது எங்களுக்கும் இடம் ஒதுக்கி, அதில் தமிழக அரசு வீடு கட்டித்தர வேண்டும், எங்களை அகதிகள் போலவே நடத்தி வருவதைத் தவிர்க்க வேண்டும், எனக் கோஷம் எழுப்பினர்.

காலை 9 மணி அளவில் தொடங்கிய சாலை மறியல் காலை 10.30 மணி வரை நீடித்ததால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி வட்டாட்சியர் பெருமாள், ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன், மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை.

தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ். தரணிவேந்தன் அவர்களிடம் வந்து நான் சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து, பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்கிறேன், உங்களுக்கும் தமிழக அரசு வீடுகள் கட்டித்தரும், எனக்கூறியதும் இலங்கை அகதிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!