அரசு பள்ளியில் இட நெருக்கடி: மாணவர்கள் அவதி

அரசு பள்ளியில் இட நெருக்கடி: மாணவர்கள் அவதி
X

குறைவான கட்டிடங்களுடன் செயல்படும் பள்ளி.

பழமையான வகுப்பறை கட்டடம் இடித்து அகற்றப்பட்டதால் ஒரே வகுப்பறையில் 2 வகுப்பு மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தப்படுகிறது.

தேவிகாபுரம் ஊராட்சியில் சேத்துப்பட்டு சாலை அருகே சுமார் ஒரு ஏக்கரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தேவிகாபுரம், மொடையூர், நரசிங்கபுரம், சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகள் தமிழ் வழி, ஆங்கில வழி என 400 பேர் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் 40 ஆண்டுகள் பழமையான பள்ளிக் கட்டடம் பழுதடைந்ததால் கடந்த 2019 ஆம் ஆண்டில் நான்கு வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தை ஆரணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் பொது நிதியிலிருந்து இடித்து அகற்றினர். இதனால் மாணவர்களுக்கு அமர்ந்து படிக்க முடியாத சூழல் உருவானது.

மேலும் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது பள்ளிகள் திறந்து உள்ள நிலையில் மாணவ மாணவிகள் அனைவரும் நேரடி வகுப்பிற்கு வருவதால் வகுப்பறை வசதி இன்றி ஒரே வகுப்பறையில் இரு வகுப்பு மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.

இதனால் மாணவர்கள் பாடத்தை கவனிக்க முடியாமல் அவர்களது கல்வி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் மாணவர்களின் குடிநீர் தேவைக்காக பள்ளி அருகே அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறு சாலை விரிவாக்க பணியின் போது மூடப்பட்டுவிட்டது இதனால் மாணவர்களுக்கு குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனிடம் முறையிட்டதன்பேரில் குடிநீருக்காக அவர் மாற்று ஏற்பாடு தற்போது செய்து கொடுத்துள்ளார். தலைமையாசிரியர் சங்கர் கூறுகையில் மாணவர்களுக்கான வகுப்பறை பற்றாக்குறை , குடிநீர் பிரச்சனை , பள்ளிக்கு சுற்றுச்சுவர், பழுதடைந்துள்ள சமையல் கூடம் என பல்வேறு குறைபாடுகள் குறித்து ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் இடம் தெரிவித்துள்ளோம் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என கூறினார்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மாணவர்களுக்கு வகுப்பறை கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!