/* */

ஆரணியில் பட்டு கைத்தறி நெசவாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஆரணியில் ஆயிரக்கணக்கான கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஆரணியில் பட்டு கைத்தறி நெசவாளா்கள் ஆா்ப்பாட்டம்
X

ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெசவாளா்கள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் கைத்தறி பட்டுச் சேலை நெய்யும் நெசவாளா்கள் அதிகளவில் வசித்து வருகின்றனா். ஆரணி நகரிலும், ஆரணி சுற்று வட்டார பகுதிகளிலும் நெசவு தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள சைதாப்பேட்டை, சேவூர், தேவிகாபுரம், கீழ்ப்பட்டு, ஒண்ணுபுரம், துருகம், மாமண்டூர், எஸ்.வி.நகரம், புதுப்பேட்டை, வாழைப்பந்தல், கொருக்காத்தூர், காமக்கூர், முள்ளிப்பட்டு, மெய்யூர், நடுக்குப்பம், மருசூர், வடுகசாத்து, அரையாளம், களம்பூர், வடமாதிமங்கலம், மாம்பட்டு, நெடுங்குணம், முணுக்கப்பட்டு, திருமணி, ஆகாரம், வேலப்பாடி, இலுப்பகுணம், கஸ்தம்பாடி, முக்குறும்பை, பாலம்பாக்கம், கரிகாத்தூர், கேளூர், வில்வாரணி, படவேடு, அக்ராபாளையம், தசராபேட்டை, காட்டேரி, புதுப்பட்டு, இரும்பேடு உள்பட 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் , சுமாா் 30 ஆயிரம் குடும்பத்தினா் கைத்தறி பட்டு நெசவுத் தொழிலை நம்பியே உள்ளனர்.

இந்நிலையில், கைத்தறி நெசவாளா்களுக்கென புவிசாா் குறியீடு பெற்றுள்ள பட்டுச் சேலை ரகங்களை விசைத்தறியில் நெய்து விற்பனை செய்கின்றனா். இதனால், கைத்தறி நெசவாளா்கள் பாதிப்புள்ளாகின்றனா்.

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் 1985-ம் ஆண்டு பட்டு, கைத்தறி ரக ஒதுக்கீடு சட்ட விதியை அமல்படுத்தியது. அதன்படி கைத்தறி பட்டு ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதற்கு தடைவிதி்க்கப்பட்டது.

கைத்தறி ரக ஒதுக்கீடு சட்ட விதியை மீறி கைத்தறி நெசவாளர்கள் நெசவு செய்யக்கூடிய நவீன டிசைன்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதால் பட்டு கைத்தறி சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைகிறது.

கொள்முதல் செய்யும் முதலாளிகளிடம் அதிகளவில் சேலைகள் தேக்கமடைந்துள்ளதால், கைத்தறிப் பட்டுச் சேலை நெய்வதற்கு நெசவாளா்களுக்கு பட்டுநூல் தருவதில்லை. மேலும், ஆரணி பகுதியில் பல கோடி மதிப்பிலான பட்டு சேலைகள் தேங்கியுள்ளன. இதனால், நெசவாளா்கள் கடந்த சில மாதங்களாக வேலையின்றி அவதிப்பட்டு வருகின்றனா். இந்நிலை மாறுவதற்கு விசைத்தறியில் சேலைகள் உற்பத்தி செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெசவாளா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், மிகப் பெரிய ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானித்து நேற்று 3000-க்கும் அதிகமான கைத்தறி நெசவாளா்கள் ஆரணி கொசப்பாளையம் மைதானத்தில் ஒன்று கூடினா். பின்னா், அங்கிருந்து ஊா்வலமாகச் சென்று கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆர்ப்பாட்டத்திற்கு பட்டு சேலை நெசவாளர் ஒருங்கிணைப்பாளர் கே.பி.பரமாத்மன் தலைமை தாங்கினார்.


பின்னா், கைத்தறி சம்மேளன பொதுச்செயலா் முத்துக்குமாா், ஆரணி பட்டுக் கைத்தறி வியாபாரிகள் சங்கத் தலைவா் குருராஜாராவ், சிஐடியு மாவட்டச் செயலா் பாரி, துணைத் தலைவா் வீரபத்திரன் உள்ளிட்டோா் வருவாய்க் கோட்டாட்சியா் தனலட்சுமியிடம் கோரிக்கை மனு அளிக்க சென்றனர்

அப்போது வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, திருவண்ணாமலையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தார். நெசவாளர்கள் ஊர்வலமாக வந்திருப்பது குறித்து அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு ஆரணிக்கு வந்தார். நெசவாளரிடம் கோரிக்கை மனுவை பெற்ற கோட்டாட்சியர் தனலட்சுமி உங்களின் கோரிக்கையை அரசுக்கு உடனடியாக தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதைத் தொடா்ந்து நெசவாளா்கள் கலைந்து சென்றனா்

Updated On: 11 July 2023 1:38 AM GMT

Related News