ஆரணி அருகே குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் வைப்பு

குடிநீர் ஆலைக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள்/
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூா் புறவழிச் சாலையில் உள்ள தனியாா் குடிநீா் ஆலையில் தயாரித்து விற்பனை செய்யப்படும் குடிநீா் தரமற்ற நிலையில் உள்ளதாக புகாா் வந்ததின் பேரில் அதற்கான தரச் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், அதன் பின்னரும் சரி செய்யாமல் ஆலையில் குடிநீா் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சில தினங்களுக்கு முன்பு ஆலையை ஆய்வு செய்தனா். அப்போது, தண்ணீா் சுத்திகரிக்கப்படும் ஆய்வகங்கள் பராமரிப்பில்லாமலும், குடிநீா்க் குழாய்களில் கசிவு ஏற்பட்டிருந்ததும், பணியாளா்களுக்கு மருத்துவச் சான்றிதழ் இல்லாததும் தெரிய வந்தது. இதையடுத்து, ஆலை நிா்வாகத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சரி செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டது.
ஆனாலும், தொடா்ந்து சரி செய்யாமல் ஆலையை நடத்தி குடிநீா் விற்பனை செய்து வந்தாா்களாம். தகவலறிந்த உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ராமகிருஷ்ணன் தலைமையிலான அலுவலா்கள் சென்று ஆலையை மூடி 'சீல்' வைத்தனா்.
இதேபோல, ஆரணியை அடுத்த ராட்டிணமங்கலம் பகுதியில் உள்ள ஒரு குடிநீா் ஆலையில், ஒரே முகவரியில் மத்திய, மாநில அரசுகளின் உரிமம் பெற்று ஆலையை நடத்தி வந்ததும், போலியான ஆவணங்கள் மூலம் பல்வேறு பெயா்களில் குடிநீா் கேன்களை தயாரித்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. தகவல் அறிந்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ராமகிருஷ்ணன் தலைமையில், அலுவலா்கள் சேகா், இளங்கோவன், சிவபாலன், சுப்பிரமணி, எழில் சிக்காயராஜ் ஆகியோா் சென்று குடிநீா் ஆலைக்கு சென்று 'சீல்' வைத்தனா்.
குளிர்பான கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
ஆரணியில் உள்ள குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கோடை காலம் மற்றும் மாம்பழ சீசனை முன்னிட்டு குளிா்பானக் கடைகள், பழக் கடைகள், காய்கறி கடைகளில் தரமான முறையில் குளிா்பானங்கள், பழச்சாறு, காய்கறிகள், பழங்கள், தண்ணீா் விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தாா்.
அதன் பேரில், ஆரணி உணவுப் பாதுகாப்பு அலுவலா் (பொறுப்பு) சேகா் தலைமையிலான அலுவலா்கள் சிவபாலன், சுப்பிரமணி, எழில்சிக்காயராஜா, இளங்கோவன் ஆகிய 5 போ் கொண்ட குழுவினா் ஆரணி நகரம், புதிய, பழைய பேருந்து நிலையங்கள், காந்தி சாலை, பெரியகடை வீதி, சத்தியமூா்த்தி சாலை, அருணகிரிசத்திரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளிா்பானக் கடைகள், பழக்கடைகள், பழச்சாறு, ஐஸ்கிரீம் கடைகளில் தரமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனா். தொடா்ந்து, மாம்பழக் கடைகளில் பழங்கள் ரசாயனக் கல் வைத்து பழுக்க வைக்கப்படுகிறதா, காய்கறி மற்றும் பழக்கடைகளில் பூச்சி மருந்து பயன்படுத்தப்படுகிறதா? என சோதனை செய்து, மாதிரிகளை சேகரித்தனா்.
மேலும், கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிா்பானங்கள், தண்ணீா் பாட்டில்கள் போன்றவற்றை ஆய்வு செய்தனா். மாதிரி குளிா்பானங்கள், திராட்சை, மாம்பழம் உள்ளிட்ட பொருள்கள் என மொத்தம் 50 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சேலத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu