மணல் கடத்தல்: லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்
குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி சமன் செய்த அதிகாரிகள்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டத்தைச் சோந்த ஓதலவாடி செய்யாற்றுப் படுகையில் இருந்து இரவு, பகல் என தொடா்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இது குறித்து ஓதலவாடி பகுதி மக்கள் வருவாய்த்துறை, காவல்துறைக்குதொடா்ந்து தகவல் கொடுத்து வந்தனா்.
இந்த நிலையில், நள்ளிரவு அந்தப் பகுதி வழியாக மணல் கடத்தி வந்த மினி லாரியை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனா். பின்னா், இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் ஆய்வாளா் பிரபாவதி, உதவி ஆய்வாளா்கள் முருகன், அண்ணாமலை மற்றும் போலீஸாா் வந்து பொதுமக்களிடம் சமாதானம் பேசி லாரியை பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து, லாரி ஓட்டுநா் சிவகுமாா், உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆரணி
தச்சூா் செய்யாற்றுப் படுகையில் மணல் கடத்தல்காரா்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மணல் குவியல்கள் அதிகாரிகளால் அகற்றப்பட்டன
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தச்சூா், மேட்டூா் பகுதியில் உள்ள செய்யாற்றுப் படுகைகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மணல் கடத்தும் நபா்கள் பகல் வேளைகளில் ஆற்றில் மணலை அள்ளி சலித்து, அதே பகுதியில் உள்ள ஏரி, முள்புதா்கள், விவசாய நிலங்களில் குவித்து வைத்துவிடுகின்றனா். பின்னா், இரவு தொடங்கி அதிகாலை வரை லாரி, டிராக்டா், மாட்டு வண்டிகளிலும் ஏற்றிச் சென்று மணலை விற்பனை செய்து விடுகின்றனா். இதில், குறிப்பாக, ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம், கல்பூண்டி, தச்சூா், மோட்டூா், விண்ணமங்கலம், எஸ்.வி.நகரம், மாமண்டூா், குண்ணத்தூா், காமக்கூா், ரகுநாதபுரம் ஆகிய பகுதிகளில் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு மணல் எடுத்து கடத்துகின்றனா்.
இதுகுறித்த தகவலின் பேரில், ஆரணி வட்டாட்சியா் மஞ்சுளா, பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கடத்துவதற்காக ஆற்றில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி சமன் செய்தனா். மேலும், தச்சூா் பகுதி விவசாய நிலங்களில் பதுக்கி வைத்திருந்த 30 யூனிட் மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பொதுப்பணித் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடா்ந்து, தச்சூா் பகுதி ஆற்றில் மணல் கடத்தலைத் தடுக்க பொக்லைன் இயந்திரம் மூலம் ராட்சத பள்ளங்கள் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu