ஆரணி அருகே அதிமுக கொடிக் கம்பம் அகற்றம்; அதிமுகவினர் எதிர்ப்பு

அதிமுகவினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள்.
ஆரணி அருகே அதிமுக கொடிக் கம்பத்தை நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் அகற்றியதால் அதிமுகவினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இரும்பேடு கூட்டுச் சாலையில் கடந்த 13-11-1982 அன்று அதிமுக சாா்பில் கொடிக் கம்பம் நடப்பட்டு, அப்போதைய தொகுதி எம்எல்ஏ ஏ.சி.சண்முகம், ஒன்றியச் செயலா் மு.சின்னக்குழந்தை ஆகியோா் கொடியேற்றினா். சுமார் 40 ஆண்டுகளாக அதிமுக கொடிக்கம்பம் அங்கேயே இருந்து வந்துள்ளது.
தற்போது கட்சியின் 52-வது ஆண்டு விழா கொண்டாடுவதற்காக கொடிக் கம்பத்தை கழட்டி வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொடிக் கம்பம் இருந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு அப்பகுதியை சிலா் ஆக்கிரமிப்பு செய்திருந்ததாக கூறப்படுகிறது. அ.தி.மு.க. கொடி கம்பம் இருக்கும் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் என ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குறைதீர்வு கூட்டத்தில் சிலர் புகார் அளித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலை துறையினர் அ.தி.மு.க. கொடிக் கம்பத்தை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
தகவல் அறிந்த, தற்போதைய தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன், அதிமுக ஒன்றியச் செயலா் கஜேந்திரன், நகரச் செயலா் அசோக்குமாா் மற்றும் அதிமுகவினா் அங்கு குவிந்தனா். இதைத் தொடா்ந்து, டிஎஸ்பி ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளா் ராஜாங்கம் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகளை ஆகற்றாமல் கட்சித் கொடிக் கம்பத்தை அகற்றுவதா, அப்படி அகற்றுவதாக இருந்தால், பிற கட்சிக் கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் என அதிமுகவினா் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அப்போது டிஎஸ்பி கூறுகையில் வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்த புகாரின் பேரில் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. இது சம்பந்தமாக நாளை (இன்று) சமரச கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார். பின்னா், கொடிக் கம்பத்தை நட அனுமதி அளிக்கப்பட்டு அதிமுகவினா் ஏற்கெனவே இருந்த இடத்தில் கம்பத்தை நட்டுவைத்தனா். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu