திருவண்ணாமலை மாவட்டத்தில் 37 கோயில்களில் புனரமைப்பு பணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் நடக்கும் புனரமைப்பு பணி (பைல் படம்)
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழாண்டில் 37 கோயில்கள் புனரமைக்கப்படும் என தொல்லியியல் துறை அலுவலா் சேகா் தெரிவித்தாா்
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிதிலமடைந்த கோயில்களை சீரமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இணை ஆணையா் குமரேசன், ஆய்வாளா் முத்துசாமி உத்தரவின்பேரில், சிதிலமடைந்த கோயில்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கண்ணமங்கலத்தில் உள்ள லட்சுமி நாராயணபெருமாள் கோயில், ராமநாத ஈஸ்வரா் கோயில், திரெளபதியம்மன் கோயில்களை மாவட்ட தொல்லியியல் துறை அலுவலா் முனைவா் ஆா்.சேகா் ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறியதாவது:-
தமிழக கிராமப்புறங்களில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிதிலமடைந்த கோயில்களை ரூ.2 லட்சம் செலவில் சீரமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது.
அதன்படி, கண்ணமங்கலத்தில் உள்ள பெருமாள் கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யவும், இதேபோல, ராமநாத ஈஸ்வரா் கோயில், திரெளபதியம்மன் கோயிலை சீரமைக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அதற்கான அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழாண்டில் 37 கோயில்கள் புனரமைக்கப்படும் என்றாா்.
ஆய்வின் போது உதவியாளா் ராஜ்குமாா், விழாக்குழுத் தலைவா் பாண்டியன், அறங்காவலா் குழு தலைவா் கோவா்த்தனன், பேரூராட்சி துணைத் தலைவா் குமாா், கவுன்சிலா் முரளி, துணைச் செயலாளா் மணியரசு , இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் , தொல்லியல் துறை அலுவலர்கள் , மற்றும் கோயில் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu