சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

Salem Rowdy
ஆரணியில் 7 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா பலவன்பாடி கிராமத்தை சேர்ந்த நாராயணன் மகன் ராமன் வயது 28. இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி 7 வயதுடைய சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தாய் நடந்த சம்பவம் குறித்து ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இவ்வழக்கு கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ராமனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் பரிந்துரை செய்தார். இதையடுத்து ராமனை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu