அம்மாபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பொதுமக்கள் பூட்டு
ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்
கண்ணமங்கலம் அருகே அப்பநல்லூர் என்ற அம்மாபாளையம் ஊராட்சி உள்ளது. ஊராட்சி தலைவராக வெங்கடேசன், துணைத்தலைவராக சித்தார்த்தன் மற்றும் 8 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தலைவர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றவில்லை, ஊராட்சி நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது உள்பட பல்வேறு புகார் சம்பந்தமாக துணைத்தலைவர் சித்தார்த்தன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அங்கு உள்ளே இருந்த தலைவர் வெங்கடேசனை, வெளியே வரக் கூறினர். ஆனால் அவர் வெளியே வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பல்வேறு புகார்கள் குறித்து வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர், உங்கள் புகாரை மனுவாக கொடுங்கள் என்றார். இதையடுத்து தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் சித்தார்த்தன் மற்றும் சில வார்டு உறுப்பினர்கள் உள்ளே இருந்தபோது பொதுமக்கள் அலுவலகத்தை பூட்டிவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கண்ணமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தரணி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமரசம் பேசி அலுவலகத்தை திறந்தனர். பொதுமக்கள் கூறுகையில், கிராமத்திற்கு வரும் வழியில் ரெயில்வே சுரங்கப்பாதையில் அளவுக்கதிகமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனை அப்புறப்படுத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளவில்லை. ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. பொதுமக்கள் கூறும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் உள்ளனர். இதுகுறித்து பலமுறை கலெக்டர் உள்பட பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் பூட்டுப்போடும் போராட்டம் நடத்தினோம் என்றனர்.
இந்த புகார்கள் குறித்து தலைவர் வெங்கடேசன் கூறுகையில், துணைத்தலைவர் சித்தார்த்தன் ஊராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை. கடந்த 4 ஊராட்சி மன்ற கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. மேலும் ஊராட்சி நிதி மற்றும் பல்வேறு திட்ட நிதி செலவினங்களை பரிமாற்றம் செய்ய கையெழுத்துப் போட மறுத்துவிட்டார். இதனால் துணை தலைவருக்கு பதிலாக வார்டு உறுப்பினர் யாரேனும் ஒருவருக்கு கையெழுத்து அதிகாரம் வழங்க வேண்டும் என ஊராட்சி மன்ற தீர்மானம் நிறைவேற்றி கலெக்டருக்கு அனுப்பியுள்ளோம். இதனால் என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, பழிவாங்கும் நோக்குடன் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தியுள்ளார் என்று கூறினார்
முன்னதாக அம்மாபாளையம் தர்மராஜா கோவில் வளாகத்தில் கிராம முக்கிய பிரமுகர்கள் நடத்திய கூட்டத்தில், தன்னிச்சையாக, மக்களை மதிக்காமல் செயல்படும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu