குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ஆரணி அருகே குண்டும் குழியுமான சாலை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகாவில் உள்ள மேலானூர், அம்மாபாளையம், ஒண்ணுபுரம் பகுதிகளில் சாலைகள் சிதலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேலானூர் ஊராட்சிக்குட்பட்ட கரிகாந்தாங்கல் கிராமத்தில் சுமார் 600 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேலும் ஆரணி வந்தவாசி சாலையில் ஆவியதாங்கள் கூட்ரோடு அருகில் இருந்து கரிக்காதாங்கல் கிராமத்திற்கு செல்லும் இரண்டு கிலோமீட்டர் சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக உள்ளதால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
மேலும் குண்டும் குழியுமான சாலையாக காணப்படுவதால் அரசு பேருந்து, தனியார் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் இந்த கிராமத்திற்கு செல்வதில்லை. இதனால் வெளியூர் செல்லும் கிராம பொதுமக்கள் இந்த மோசமான சாலையை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது.
மேலும் இரவு நேரங்களில் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த சாலையை கடக்க முடியவில்லை என்றும் கடந்த 30 ஆண்டுகளாக சாதாரண அடிப்படை வசதியான சாலை வசதியே தங்களின் கிராமத்திற்கு இல்லை என மனவேதனையுடன் இந்த கிராம மக்கள் கூறுகின்றனர் .
இது சம்பந்தமாக பலமுறை ஊராட்சி மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தனர் . மேலும் மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு கிராமத்திற்கு சாலை வசதி அமைத்து தரவேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்மாபாளையம் - ஒண்ணுபுரம் இடையிலான சாலை
ஆரணி அருகேயுள்ள அம்மாபாளையம் - ஒண்ணுபுரம் இடையிலான சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் சுமாா் 5 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில் அம்மாபாளையம் - ஒண்ணுபுரம் சாலை வழியாக தினமும் விவசாய உபகரண பொருட்கள் வாங்குவதற்காகவும், பள்ளி மற்றும் மருத்துவமனை பகுதிகளுக்கு செல்வதற்காகவும் பொதுமக்கள் இந்த சாலை வழியாக தான் சென்று வர வேண்டும்.
மேலும் இந்த சாலை வழியாக தான் கல்லூரி பள்ளி வாகனங்கள், தனியார் வாகனங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வர வேண்டி உள்ளது.
மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் நோயாளிகள் கர்ப்பிணிகள் வயதானவர்கள் இந்த மோசமான சாலை வழியாக தான் செல்ல வேண்டி உள்ளது.
இவர் கிராமங்களுக்கு இடையிலான மூன்று கிலோமீட்டர் தொலைவினான இந்த சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
விவசாயம் நிறைந்த இப்பகுதியில் விவசாய இடுப்பொருட்களை கொண்டு செல்லவும் டிராக்டர் உள்ளிட்ட விவசாய பயன்பாட்டுக்கு வாகனங்களை கிராமத்தில் உள்ளே கொண்டு செல்ல பாதை வசதி இல்லாததால் விவசாயிகள் மிகவும் அவதிப்படுகின்றனர் .மேலும் வாடகை வாகனங்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த சாலையை காரணம் காட்டி நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்ல இந்த கிராமங்களுக்கு வர மறுக்கின்றனர்.
எனவே இந்த சாலையை மாவட்ட நிர்வாகம் உடனே சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu