பள்ளி அருகில் உள்ள மதுபான கடையை முழுமையாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கலெக்டரை சந்தித்து மனு அளிக்க வந்த பொதுமக்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி நடுக்குப்பம் ஊராட்சியில் இருந்து மதுக்கடையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று கோரி கலெக்டரை சந்தித்து அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்
பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நடுக்குப்பம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக பள்ளிக்கு அருகில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசால் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகும் சூழல் அதிகளவில் உருவானது. இதனால் பள்ளிக்கு அருகில் செயல்படும் மது கடையை முழுமையாக எங்கள் ஊராட்சியில் இருந்து அகற்ற பலமுறை கிராம சபை கூட்டங்களிலும், நேரடியாக டாஸ்மாக் மேலாளர், கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகங்களிலும் மனு அளித்தும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தற்போது நடுக்குப்பம் ஊராட்சியில் உள்ள விநாயகபுரம் என்ற பகுதிக்கு அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது. அந்த இடத்தில் விவசாய நிலங்கள், கோவில், இடுகாடு, குளம், ஏரி போன்ற நீர்பிடிப்பு பகுதிகள் உள்ளன. மேலும் எங்கள் ஊராட்சியில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு அந்த வழியாக காமக்கூர்பாளையம் கிராமத்தில் இருந்து மாணவ, மாணவிகள் வருகின்றனர். இதனால் எங்கள் ஊராட்சியில் புதிதாக அந்த இடத்தில் மதுகடை திறக்கக்கூடாது. ஊராட்சியில் இருந்து முழுமையாக மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கிராம பொதுமக்கள் கூறுகையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி-படவேடு நெடுஞ்சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே அரசு மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மதுபானக் கடையால், இளம் சிறார்கள் பாதிக்கப்படுவதாகவும், தினமும் மது குடித்துவிட்டு ரகளைகளில் ஈடுபடுவதாகவும், சண்டை சச்சரவுகள் அதிகமாக நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொடர்ந்து மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பல்வேறு கிராம சபைக் கூட்டத்திலும் இதுகுறித்து வலியுறுத்தி இருந்தோம்.
கடந்த குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போதும் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதி கிராம சபை கூட்டத்திற்கு வந்திருந்த அதிகாரிகளிடம் மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் கிராம மக்களின் கேள்விகளுக்கு தங்களால் பதில் கொடுக்க முடியவில்லை என அப்போதே கோரிக்கை வைத்தார்.
அப்போது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுகந்தி ஏழுமலை குணாநிதி கீதா மற்றும் பரிமளா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்து ராஜினாமா கடிதத்தை ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவிடம் வழங்கினர்.
அப்போது ஆரணி வட்டாட்சியர் , மேற்கு ஆரணி பி. டி. ஓ. ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என கூறினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் தான் இன்று நாங்கள் நேரடியாக கலெக்டரை சந்தித்து எங்கள் புகார் அளித்துள்ளோம்.நிச்சயம் நல்ல தீர்வு ஏற்படும் என நம்புகிறோம் எனக் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu