ஆரணி சூரிய குளத்தில் திட்ட மதிப்பீட்டு குழு ஆய்வு
சூரிய குளத்தை ஆய்வு செய்த திட்ட மதிப்பீட்டு குழு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரின் மையப் பகுதியில் சூரிய குளத்தை ஆய்வு மேற்கொள்ள வருகை தந்த தமிழ்நாடு பேரவை மதிப்பீட்டு குழுவினரை நகர மன்ற தலைவர் மணி வரவேற்றார்.
மேலும் சூரிய குளத்தில் சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்தும் கழிவு நீர் கால்வாய் நீர் தேங்கி வருவதால் துர்நாற்றம் வீசப்பட்டு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் துறை சூரிய குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி நவீனமயமாக்க ரூபாய் 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஒதுக்கப்பட்ட இந்த நிதியை நகராட்சி 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க ஒரு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றன.
இந்நிலையில் இந்த சூரிய குளத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் எம் எல் ஏ, தலைமையில் எம்எல்ஏக்கள் சேவூர் ராமச்சந்திரன், சிந்தனைச் செல்வன், பரந்தாமன், சிவகுமார் மற்றும் மதிப்பீட்டுக் குழு செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் சூரிய குளம் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நவீன மயமாக்கப்படும் என்று மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் ,நகராட்சி ஆணையர் குமரன்,வட்டாட்சியர் மஞ்சுளா, பொறியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கலசப்பாக்கம்
கலசப்பாக்கம் அடுத்த அருணகிரி மங்கலத்தில் தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.
கலசப்பாக்கம் அடுத்த அருணகிரி மங்கலத்தில் ரூபாய் 86 லட்சத்தில் நடைபெற்று வரும் தாட்கோ திருமண மண்டபத்தை தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் கூறுகையில், கலசப்பாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் தரமாக உள்ளது. அதேபோல் கலசப்பாக்கம் பகுதியில் உள்ள அருணகிரி மங்கலத்தில் நடைபெற்று வரும் தாட்கோ திருமண மண்டபத்தை ஆய்வு செய்ததில் பணிகள் அனைத்தும் தரமாகவும் ஒழுங்காகவும் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. மேலும் இப்பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
தொடர்ந்து அருணகிரி மங்கலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி திறன் எப்படி உள்ளது மேலும் தமிழக முதல்வரால் வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தும் பள்ளி மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சரியான முறையில் சென்றடைகிறதா என ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் அருண், ஊராட்சி செயலாளர் ராமச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கட்டமைப்பு தலைவர்கள், அரசு அலுவலர்கள் ,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu