பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலை

பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலை
X
ஆரணி அருகே பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆரணி அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர்வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவரது 17 வயது மகள் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். பள்ளி விடுமுறை நாட்களில் இந்த மாணவி வேலூர் அருகே உள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்று வருவது வழக்கமாம். அப்போது, சென்னை ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வரும், வேலூர் மாவட்டம், மேல்வல்லம் கிராமத்தை சேர்ந்த சம்பத் மகன் மோகன், என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

அப்போது, மோகன் அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை கட்டாயப்படுத்தி தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு, மோகன் அந்த மாணவியிடம் சரிவர பேசாமலும், போன் எடுக்காமலும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவிக்கு திடீரென உடல் நிலை பாதித்ததால் அவரது தாயார் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் விசாரித்தபோது, மோகன் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள மோகனை வலைவீசி தேடிவருகின்றனர். மேலும், 2 மாதம் கர்ப்பிணியாக உள்ள அந்த மாணவியை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி