குற்ற சம்பவங்களை தடுக்க ஆரணி வட்டார வங்கி மேலாளர்களுக்கு போலீசார் அறிவுரை

ஆரணி நகர காவல் நிலையத்தில் வங்கி மேலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் வங்கிகளில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றசம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்து காவல்துறை சார்பில் வங்கி மேலாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் ஆரணி நகர காவல் நிலையத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, டவுன் எஸ்.ஐ. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். எஸ்.ஐ.க்கள் சுந்தரேசன், வெங்கடேசன், ஜெயப்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் கலந்துகொண்டு விழிப்புணர்வு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது, ஆரணி சுற்றுவட்டார பகுதிகளான ஆரணி டவுன், எஸ்.வி.நகர், சேவூர், கண்ணமங்கலம், தச்சூர், களம்பூர் உள்ளிட் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து வங்கிகளிலும் சுழற்சி முறையில் பகல், இரவு நேரங்களில் பாதுகாப்பு காவலர்கள் பணி அமர்த்த வேண்டும்.
வங்கி செயல்படும் நேரங்களில் வாடிக்கையாளர்களை வரிசையில் நிறுத்தி வங்கி சேவை பணிகளை செய்ய வேண்டும். வங்கியில் சந்தேகப்படும்படி நீண்ட நேரமாக இருக்கையில் அமர்ந்திருந்தால், அந்த நபர்களை விசாரித்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
வங்கிகளுக்கு வரும் நபர்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
வங்கி லாக்கர் மற்றும் பணம் வைக்கும் அறைகளில் அபாய அலாரம், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் நேரத்தில் வங்கி மேலாளருக்கு எஸ்எம்எஸ் வரும் வசதி செய்திருக்க வேண்டும்.
வங்கி வளாகங்கள் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும். வங்கிகளுக்கு வரும் நபர்கள் பெரிய அளவில் பொருட்களோ அல்லது பைகளை எடுத்து வர அனுமதிக்கக்கூடாது. வங்கிகளின் அனைத்து ஏ.டி.எம்.களில் கேமராக்கள் பொருத்தி இரவு பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும்.
குற்ற சம்பவங்களை தடுக்க வங்கி ஊழியர்கள் பாதுகாப்புடனும், கவனத்துடன் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு தெரிவித்து போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வங்கி மேலாளர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu