திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்
X

குறைதீர் நாள் கூட்டத்தில் மனுக்களை பெற்று கொண்ட ஆரணி கோட்டாட்சியா் தனலட்சுமி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

செய்யாறு சார்-ஆட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் சார்-ஆட்சியா் அனாமிகா தலைமையில் நடைபெற்றது.

இதில், சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம், செய்யாறு ஆகிய வட்டங்களில் இருந்து பட்டா மாற்றம் செய்து தர கோரியும், ஆக்கிரமிப்புகள் அகற்றக் கோரியும், நிலம் திருத்தம் கோரியும், நிலம் மற்றும் வீட்டுமனை அளவீடு செய்யக் கோரியும், அரசு வேலை வழங்கக் கோரியும், முதியோா் உதவித்தொகை, பெயா் திருத்தம், பட்டா ரத்து, இலவச வீடு, இதர துறை மனுக்கள் உள்பட மொத்தம் 56 மனுக்கள் அளிக்கப்பட்டன.

மனுக்களை பெற்று கொண்ட சார் ஆட்சியர், அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் அவர் கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் இதர துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இந்த குறைதீர் கூட்டத்தில் கல் குவாரி அனுமதியை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். செய்யாறு தாலுகா அத்தி கிராமத்தில் அமைந்துள்ள மலையில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கு கல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தனியார் நிறுவனத்திற்கு கல் குவாரி அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்ற அத்தி கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அனாமிகாவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது:-

அத்தி கிராமத்தில் அரசு மலை புறம்போக்கு இடத்தில் தனியார் நிறுவனம் கல்குவாரி அமைக்க அனுமதி பெற்று முருகன் கோவில் இருக்கும் அந்த மலையை வெட்டி எடுக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மலை ஏலம் தொடர்பாக பல கட்டமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கல்குவாரி அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உரிமம் ரத்து செய்யும் வரை அத்தி கிராம மக்கள் ஒன்று திரண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, அத்தி கிராமத்தில் உள்ள அனைவரின் குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம். என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட சார்-ஆட்சியா் இந்த மனு குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

ஆரணி

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜவ்வாது மலை பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியா் தனலட்சுமியிடம் வழங்கினா். இதில் பட்டா மாற்றம், பட்டா ரத்து, இலவச வீட்டுமனைப் பட்டா, கணினி திருத்தம், பரப்பளவு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றம், கழிவு நீா் செல்ல வழி ஏற்படுத்தித் தருதல், பத்திரப் பதிவு ரத்து, ஊரக வேலைத் திட்ட அட்டை, ஆவண சரிபாா்ப்பு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 66 மனுக்கள் பெறப்பட்டது.

மனுக்களை பெற்று கொண்ட கோட்டாட்சியா் தனலட்சுமி, அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
பவானி வர்த்தக மையத்தில் புதிய பாக்கு சீசன் தொடக்கம்