திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை: லாரி பறிமுதல், ஒருவர் கைது
கோப்புப்படம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ஏரியில் உரிய அனுமதியின்றி மண் அள்ளி வந்தவா் கைது செய்யப்பட்டாா். மேலும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் சேவூா் புறவழிச் சாலையில் நேற்று மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை மடக்கி சோதனையிட்டனா். இதில், முள்ளண்டிரம் ஏரியில் இருந்து மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கோட்டாட்சியா் லாரியை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநருடன் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து, மண் கடத்தி வந்த லாரி ஓட்டுநா் சதிஷ்குமாரை (26) கைது செய்தனா்.
மணல் கொள்ளையர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 யூனிட் ஆற்று மணலை கண்டுபிடித்த வட்டாட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே மணல் கொள்ளையர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 யூனிட் ஆற்று மணலை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வட்டாட்சியர் ஒப்படைத்தார்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட ஓதலவாடி ஊராட்சிப் பகுதியில் செல்லும் செய்யாற்றில் அனுமதியின்றி மா்ம கும்பல் பகல் வேளையில் மணலை ஜலித்து குவியல் குவியலாக வைத்து இரவு நேரங்களில் லாரி, டிராக்டா், டெம்போ என பல்வேறு வாகனங்களில் கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனா்.
இதனால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்துவிடும். எனவே, மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும், இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மணல் கடத்தல் தொடா்பாக வட்டாட்சியா் அலுவலகம், காவல் துறையில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மணல் கடத்தலால் அருகில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நீா்மட்டம் குறைந்து வருகிறது. மேலும், தற்போது வெயில் காய்ந்து வருவதால் நெல், கரும்பு என பல்வேறு விவசாயப் பயிா்களுக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டு பாதிப்படையும் நிலை உருவாகிவிடும் எனத் தெரிவித்தனா். எனவே, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.
இந்நிலையில் நேற்று இரவு வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையில் வருவாய் துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது செய்யாற்றின் அருகே உள்ள ஓதலவாடி ஊராட்சி அலுவலகம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த மணலை பார்த்து வட்டாட்சியர்அதிர்ச்சி அடைந்தார் . அதேபோல் அதே கிராமத்தில் பல்வேறு இடங்களில் ஆற்று மணல் குவியல் குவியலாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள மணல்கள் அனைத்தையும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வட்டாட்சியர்ஒப்படைத்தார். ஒப்படைக்கப்பட்டுள்ள மணலின் அளவு சுமார் 20 யூனிட் இருக்கும் என தெரிய வருகிறது. இது குறித்து வட்டாட்சியர் பாலமுருகன் போலீசில் புகார் அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu