குடுகுடுப்பைக்காரர்களுக்கு சாதி சான்று வழங்குவது குறித்து அதிகாரிகள் ஆய்வு

குடுகுடுப்பை காரர்கள் (பைல் படம்).
ஆரணியில் குடுகுடுப்பைக்காரர்களுக்கு சாதி சான்று வழங்குவது குறித்து பழங்குடியினர் நல வாழ்வு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆரணி நகர பள்ளிக்கூடத் தெருவில் 50 குடும்பங்களை சேர்ந்த குடுகுடுப்பைக்காரர்கள் வசித்து வருகின்றனர். 150-க்கும் மேற்பட்டோர் இந்த குடும்பத்தில் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு சாதி சான்று கேட்டு அரசிடம் பலமுறை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை கொடுத்து வந்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் அவர்கள் தங்கள் குழந்தைகளை நீண்ட காலமாக பள்ளிக்கு அனுப்பாமல் இருந்து வந்தனர். இது சம்பந்தமாக கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு குடுகுடுப்பைக்காரர்களுக்கான சாதி சான்று வழங்கினால் தான் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியும். எங்களுக்கு வேலைவாய்ப்பிலும், உயர்கல்வி செல்வதற்கும், அரசின் மூலம் கிடைக்கப் படுகிற அனைத்து சலுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அரசுக்கு பலமுறை கவனஈர்ப்பு செய்தும் எந்த நடவடிக்கும் எடுக்கப்படாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை என தெரிவித்தனர்.
இந்த நிலையில் கலெக்டர் முருகேஷ் பரிந்துரைப்படி சென்னையில் இருந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிரிவு மானுடவியலாளர் ஹேமமாலினி, வேலூர் மண்டல கண்காணிப்பு பிரிவு மானுடவியலாளர் பிரசாந்த் ஆகியோர் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, தாசில்தார் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் நித்யா, கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) முனியாண்டி ஆகியோருடன் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது குடுகுடுப்பைக்காரர்களின் பழக்க வழக்கங்கள், திருமணத்தின் போதும், இறப்பின் போதும், குழந்தை பிறப்பின் போதும் ஏற்படுத்துகிற முறைகள், குடும்ப முறைகள் குறித்தும் கேள்விகள் எழுப்பி விளக்கங்களை பெற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu