நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற நோட்டீஸ்

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற நோட்டீஸ்
X

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள் 

ஆரணி பகுதியில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள், வீடுகளை அகற்ற போலீசார் முன்னிலையில் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

ஆரணி டவுன் கொசப்பாளையம், திருமலைசமுத்திரம் ஏரி மற்றும் பையூர், இரும்பேடு, திருமணி, ஒகையூர், பனையூர், மேல்சீசமங்கலம் உள்ளிட்ட ஏரி மற்றும் நீர்ப்பிடிப்பு புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து பலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். சில இடங்களில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டும், வியாபாரம் செய்தும் வருகின்றனர்.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் நீர்ப்பிடிப்பு அரசு புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அகற்ற வலியுறுத்தி தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவின்படி ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் ஆரணி தாலுகா தாசில்தார் சுபாஷ்சந்தர், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் முருகேசன், ராஜகணபதி ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கினர்.

நோட்டீஸ்களை பெற முன்வராதவர்களுக்கு போலீசாரை அழைத்து சென்று அவர்கள் முன்னிலையில் கையெழுத்து பெற்று அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்பு நோட்டீஸ் பெற முடியாது, எனத் தெரிவித்தவர்களுக்கு அந்த வீடுகளில் போலீசார் முன்னிலையில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

ஆரணியை அடுத்த பையூர் பெரிய ஏரி, கொசப்பாளையம் திருமலைசமுத்திரம் ஏரிக்கரையில் வீடு கட்டி உள்ளவர்கள் பலர் முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ். ராமச்சந்திரனிடமும் மனு கொடுத்து கால அவகாசம் பெற்றுத் தாருங்கள் எனக கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர், மாவட்ட கலெக்டரிடம் பேசி கால அவகாசம் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ள சிலர் கூறுகையில், நீண்ட காலமாக நாங்கள் இங்கே தான் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு மின் வசதி, சாலை வசதி, கால்வாய் வசதி ஆகியவை நகராட்சி, ஊராட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வீடுகளை அகற்ற வேண்டும் எனக் கூறுவது தான் மன வருத்தமாக இருக்கிறது. நீண்ட காலமாக நாங்கள் பட்டா கேட்டு வருகிறோம். ஆனால் நீர்ப்பிடிப்பு பகுதி என்பதால் அரசாங்கம் பட்டா வழங்காமல் இருந்து வந்தது. தற்போது உடனடியாக காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil