ஆரணி பகுதியில் தேனீக்கள் கொட்டியதில் பேராசிரியர் உள்பட 9 பேர் படுகாயம்

ஆரணி பகுதியில் தேனீக்கள் கொட்டியதில் பேராசிரியர் உள்பட  9 பேர் படுகாயம்
X

தேனீக்கள், பைல் படம்

ஆரணி அருகே தேனீக்கள் கொட்டி ஓய்வுபெற்ற பேராசிரியர் உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குண்ணத்தூர், களம்பூர் பகுதியில் தேனீக்கள் கொட்டி ஓய்வுபெற்ற பேராசிரியர் உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆரணி அடுத்த குண்ணத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன், ஓய்வு பெற்ற பேராசிரியர். இவரது மனைவி கோடீஸ்வரி, இவர்களுக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தையொட்டி வீடு கட்டி வசித்து வருகின்றனர். லோகநாதன் வீட்டின் வெளியே திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு திடீரென பறந்து வந்த 200 க்கும் மேற்பட்ட தேனீக்கள் லோகநாதனை கொட்டியுள்ளன. இதனால், அவர் அலறி துடித்துள்ளார். மேலும், சத்தம் கேட்டு வீட்டில் இருந்து ஓடி வந்த அவரது மனைவியையும் தேனீக்கள் சரமாரியாக கொட்டியது.

இதனால், சத்தம் கேட்டு அருகில் விவசாய நிலத்தில் இருந்த வாசுதேவன் இருவரையும் மீட்டபோது, அவரையும் தேனீக்கள் கொட்டியது. இதில், படுகாயமடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், லோகநாதன், கோடீஸ்வரி இருவரும் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில், ஓய்வுபெற்ற பேராசிரியர் லோகநாதனின் வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்களில் இருந்த தேனீக்கள் கூட்டினை பள்ளி நிர்வாகத்தினர் அழித்துள்ளனர். அப்போது, தேன்கூட்டில் இருந்து கலைந்து பறந்து சென்ற தேனீக்கள் 3 பேரையும் கொட்டியது தெரியவந்தது.

இதேபோல், களம்பூர் அடுத்த மேல் அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேசிங்கு, விவசாயி. இவரது, நிலத்தில் உள்ள கிணற்றில் மின்மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால், அதேபகுதியை சேர்ந்த ஜெய்சங்கர், தொழிலாளர்கள் ரவிசங்கர், குமரன் , நரியம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் கீழ்அயம்பேட்டை சேர்ந்த மணிகண்டன் , ஆகியோர் வந்து பழுது பார்க்க மோட்டாரை கயிறு கட்டி மேலே இழுத்துள்ளனர். அப்போது, கிணற்றில் இருந்த தேன்கூட்டிலிருந்து தேனீக்கள் திடீரென பறந்து வந்து தேசிங்கு உட்பட அனைவரையும் சரமாரியாக கொட்டியுள்ளது. இதில், அலறி துடித்து படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதியினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து களம்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!