தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு!
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கெங்கசூடாமணி கிராமத்தில் இயங்கும் ஸ்ரீசாந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா். கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி சூரியமூா்த்தி மாநாட்டை தொடங்கிவைத்தாா். ஸ்ரீசாந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளித் தாளாளா் பிரபாவதி காமராஜ் வரவேற்றாா்.
அறிவியல் மாநாட்டில் திருவண்ணாமலை, வேலூா், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவள்ளூா், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.
சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மை, மரபுசாரா எரிசக்தி, காடுகளின் பயன்கள், சிட்டுக் குருவிகளின் அழிவுக்குக் காரணம், அரிசி ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், உமி தவிடுகளால் ஏற்படும் தீமைகள், வீட்டு பூந்தோட்டம், மலை வளம், சிறுதானியங்களும் சத்தான உணவும் என பல்வேறு தலைப்புகளில் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.
இதில், சிறந்தவையாக 34 படைப்புகள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டன.
இதில் தருமபுரி மாவட்ட கல்வி அலுவலா் ரேணுகோபால், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலா் நாராயணசாமி, கல்வியாளா் மாதவன், சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் விஞ்ஞானி என்.அன்புவாகினி, அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அமுதா, குமாா், ஜாகிா்உசேன், அம்பிகா, சிவமுருகன், பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்
சிறுதானிய உணவுகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவண்ணாமலையில் மாணவர்கள் நடத்திய சிறுதானிய உணவுகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலையில் அவலூர்பேட்டை புறவழிச்சாலை அருகே ஆர் ஜி டி எஸ் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் இடையே சிறுதானியத்தால் செய்யப்படும் உணவுகள் குறித்தும், சிறுதானியத்தின் மகத்துவம் குறித்தும், வரவு செலவுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று ஒரு நாள் விற்பனை அரங்கு திறக்கப்பட்டது.
கணித துறையின் சார்பில் நடைபெற்ற இந்த ஒரு நாள் விற்பனை அரங்கின் முக்கிய நோக்கம், பொருட்களை வாங்கும் போதும், விற்கும்போதும் எத்தகைய வருவாய் கிடைக்கிறது, அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை இளம் வயதிலேயே மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரங்கு துவக்க விழாவில், 5ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறு தானியங்களால் செய்யப்பட்ட இனிப்புகள், பிஸ்கட் வகைகள், உணவுப் பொருட்கள் மற்றும் சாமை, திணை, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட பல்வேறு வகையான இயற்கையில் விளைந்த பொருட்களைக் கண்காட்சியில் வைத்து விற்பனை செய்தனர். இந்த பொருட்களை ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu