ஆரணி அருகே தடையை மீறி காளை விடும் விழா.. 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம்…
கொளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற காளை விடும் விழா.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மார்கழி அமாவாசை முன்னிட்டு காளை விடும் விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு காளை விடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் காளை விடும் விழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஆரணி கோட்டாட்சியரிடம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மாடு பிடி வீரர்கள் மனுக்களை அளித்து உள்ளனர். ஆனால் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் காளை விடும் விழாவிற்கு அனுமதி அளிக்கவில்லை.
தொடர்ந்து மாடு பிடி வீரர்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதையும் மீறி ஆரணி அருகே கொளத்தூர் கிராமத்தில் 75 ஆம் ஆண்டு காளை விடும் விழா இன்று வெகுவிமரிசையாக கொண்டாடபட்டது. திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
மாடுபிடி வீரர்கள் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இந்த நிலையில் காவல் துறையினர் தடையை மீறி காலை 8 மணி முதலே மாடு விடும் நிகழ்வு நடைபெற்றது. அனுமதியின்றி நடைபெற்ற காளை விடும் திருவிழாவில் போதிய பாதுகாப்பு, மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தினாலும் காளை விடும் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
மாடுபிடி வீரர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அனுமதியின்றி காளை விடும் விழாவை நடத்திய விழா குழுவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், மேலும் காயமடைந்த மாடுபிடி வீரர்களை மேல் சிகிச்சைக்காக ஆரணி மற்றும் போளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu