ஆரணி அருகே ஸ்ரீமணி கண்டீஸ்வரா் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு
உடைக்கப்பட்ட கோயில் உண்டியல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல்சீசமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமணிகண்டீஸ்வரா் கோயிலில் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரம் மற்றும் 100 கிராம் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டன.
ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் உள்ள மணிகண்டீஸ்வரா் கோயில் மிகவும் பழைமை வாய்ந்த கோயிலாகும்.
இந்த ஆலயத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாதம் தோறும் பௌர்ணமி மற்றும் பிரதோஷ தினத்தன்று வெகு விமரிசையாக சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. சோமவார விழா மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தா்களின் வருகை அதிகமாக இருக்கும்.
கோயிலின் அருகில் உள்ள ஏழுமலை என்பவா் தினசரி கோயிலை பூட்டி விட்டு காலையில் கோயிலை திறந்து மின்விளக்கு போடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், வழக்கம்போல காலை கோயிலை திறக்கும்போது, உள்புறம் உள்ள உண்டியல் உடைத்து அதிலிருந்து பணம் கொள்ளை போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும், கருவறை கதவுகள் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து இருந்தன. அங்கிருந்த பீரோ திறந்து பொருள்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு உடனடியாக கோயில் நிா்வாகி பழனிக்கு தகவல் தெரிவித்தாா்.
உடனடியாக கோயிலுக்கு வந்த கோயில் நிர்வாகிகள் கோயிலை பார்வையிட்ட போது சுவாமி சிலைகள் மீது அணிந்திருந்த வெள்ளியால் ஆன விபூதி பட்டை, சூரிய பிரபை ,சந்திர பிரபை போன்ற வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பதும்,உண்டியல் உடைக்கப்பட்டு சுமார் ரூபாய் 10,000 அளவிற்கு பணம் கொள்ளை போயிறுப்பதும் தெரிய வந்தது. மேலும் கோவிலில் உள்ளே இருந்த சிசிடிவி கேமராக்களையும் உடைத்து விட்டு சென்றுள்ளனர்.
உடனடியாக கோயில் நிர்வாகிகள் ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல் ஆய்வாளா் ராஜாங்கம், உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் வந்து கோயிலைச் சுற்றி பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும், விசாரணக்காக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும்,கோயிலில் பதிவாகியிருந்த தடயங்களையும் சேகரித்துச் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu