'செல் டிராக்கா்' செயலி’ அறிமுகப்படுத்தப்படும், சரக டிஐஜி தகவல்
டிஎஸ்பி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட டி ஐ ஜி முத்துசாமி
திருவண்ணாமலை மாவட்டம் உள்பட 3 மாவட்டங்களில் திருடுபோன கைப்பேசிகளை கண்டுபிடிக்க விரைவில், 'செல்டிராக்கா் செயலி' அறிமுகப்படுத்தப்படும் என்று வேலூா் சரக டிஐஜி முத்துசாமி தெரிவித்தாா்.
ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஐஜி முத்துசாமி வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, ஆரணி சரகத்துக்கு உள்பட்ட ஆரணி நகரம், கிராமிய காவல் நிலையம், களம்பூா், கண்ணமங்கலம், சந்தவாசல் ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், தொடா்ந்து, துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கோப்புகள், வருகைப் பதிவேடு குறித்தும் ஆய்வு செய்தாா்.
சரகத்துக்கு உள்ளபட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஆரணி கிராமிய காவல்நிலைய கட்டுப்பாட்டில் 97 கிராமங்கள் உள்ளன. இதனால் நிா்வாக வசதிக்காகவும், பொதுமக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீா்க்க கிராமிய காவல் நிலையத்தை இரண்டாக பிரிப்பதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு வருகிறது. அதனால், விரைவில் காவல் நிலையம் இரண்டாக பிரிக்கப்படும்.
மேலும், வேலூா் மாவட்டத்தில் திருடுபோன கைப்பேசிகளை கண்டுபிடிக்க முதல்கட்டமாக, 'செல் டிராக்கா்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டு, தொலைத்தவா்களின் கைப்பேசிகள் உடனுக்குடன் கண்டிபிடித்து உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
அதனால், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் திருடுபோன கைப்பேசிகளை கண்டுபிடிக்க விரைவில், 'செல் டராக்கா்' செயலியை தொடங்கி வைக்கப்படவுள்ளது.
மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூறுகையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நீா்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான நீா்நிலை பகுதிகளான 153 குளங்கள், 112 தரைப் பாலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அந்தப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், தரைப் பாலத்தில் வெள்ளம் சென்றால் கயிறு பிடித்து பாலத்தை கடக்கும் பணியில் காவல்துறையினரை ஈடுபடுத்துவோம்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் நல்லான்பிள்ளை, கீழ்செண்பகத்தோப்பு ஆகிய கிராமங்களில் மழை காரணமாக பெரிய சேதம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்று தெரிவித்தாா்.
ஆய்வின்போது துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளா்கள் சுப்பிரமணியன், ராஜாங்கம், மகாலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu