ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆதரித்து அமைச்சர் தீவிர பிரச்சாரம்
ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆதரித்து பேசிய அமைச்சர் வேலு.
ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட செஞ்சி சட்டமன்ற தொகுதி இந்தியா கூட்டணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் செம்மேடு ஊராட்சி பகுதியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுபான்மையினர் நலன் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றிய பெருந்தலைவரும் செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆரணி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தரணி வேந்தனை அறிமுகம் செய்து வைத்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் வேலு பேசியதாவது;
24 மணி நேரமும் உழைத்துக் கொண்டுள்ள நம் முதல்வரின் சாதனைகளை பாருங்கள், புதுமைப்பெண் திட்டம் மிகச் சிறப்பான திட்டம், எங்கு பார்த்தாலும் தற்போது பெண்கள் நிறைந்துள்ளனர். சமூகத்தில் ஆணுக்கு கிடைக்கும் சுதந்திரம் பெண்ணுக்கு மறுக்கப்பட்டதால் அவர்கள் முன்னேற புதுமைப்பெண் திட்டம் உருவானது.
விடியல் பயணம் என்றால் பிங்க் கலர் பேருந்து தான், பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயண திட்டம், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உரிமைக்கான திட்டம், அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்,தாய்மார்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை முதல்வர், தமிழ்நாட்டிற்கு தந்துள்ளார்.
10 . 5 இட ஒதுக்கீட்டுக்கு நாங்கள் எதிரி அல்ல. அதை அமல்படுத்தினால் வன்னிய மக்களுக்கு தான் நஷ்டம் . பள்ளி கல்லூரியில் 37 சதவீதத்தினர் படித்து வருகின்றனர் . மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் 40 சதவீதம் வன்னியர்களாக உள்ளனர். அதேபோல் அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீடு சதவீதத்திற்கு மேல் வன்னியர்கள் இடம் பெற்றுள்ளனர் .
மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்தது. கல்வி உரிமைகளை பறித்தது. பத்தாண்டு கால ஆட்சியில் சமையல் எரிவாயு விலை தற்போது 950 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு விலை மூன்று மடங்காக உயர்ந்து விடும்.
மாநில அரசு கட்டுப்பாட்டில் வாட் வரி இருந்ததால் விலைவாசி குறைவாக இருந்தது. தற்போதைய விலை ஏற்றத்திற்கு காரணம் ஜிஎஸ்டி தான் என வேலு பேசினார்.
இதில் திமுக தலைமை கழக தொகுதி பொறுப்பாளர் அன்பழகன், மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ரங்க பூபதி, மதிமுக மாநில துணை பொது செயலாளர் மணி, சி பி ஐ ,விடுதலை சிறுத்தைகள் , ஆரணி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் ,பேரூராட்சி மன்ற தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu