அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயானக்கொள்ளை விழா: பக்தர்கள் தரிசனம்
சாமி ஊர்வலத்தின் முன்பாக பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்தும், கொரோனாவை காளியம்மன் வதம் செய்வது போன்றும் வேடம் அணிந்து பக்தர்கள் சென்றனர்.
ஆரணி, வந்தவாசி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயானக் கொள்ளை விழா நடந்தது.
ஆரணி பருவதராஜகுல தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி மற்றும் மயானக்கொள்ளை விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மயானக்கொள்ளை விழாவையொட்டி நேற்று உற்சவ அம்மனை அலங்கரித்து சிம்ம வாகனத்தில் வைத்தனர். அப்போது பக்தர்கள் உடலில் அலகு குத்தி கொண்டு கிரேன் மூலம் அந்தரத்தில் சென்று அம்மனுக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.
பொதுமக்கள் நேர்த்தி கடனாக கொழுக்கட்டை, சுண்டல், கடலை, சாக்லேட், இனிப்பு போன்றவற்றை வீசினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து உற்சவர் மாட வீதியின் வழியாக ஆரணி கமண்டல நதி ஆற்றுக்கு கொண்டு சென்று, அங்கு மயானக்கொள்ளை விழா நடந்தது. பின்னர் உற்சவரை கோவிலுக்கு அழைத்து சென்றனர். இதே போல ஆரணி காந்தி ரோட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலிலும், ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் மயானக்கொள்ளை விழா வெகு சிறப்பாக நடந்தது.
வந்தவாசி:
வந்தவாசியில் பருவதராஜகுல வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழாவையொட்டி நேற்று முன்தினம் ஊரணி பொங்கல் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகமும், இரவில் மகா சிவராத்திரி உற்சவமும், பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலாவும் நடந்தது.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் முக்கிய வீதிகளின் வழியாக மயானத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் முன்னிலையில் மயானக்கொள்ளை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் 1,008 நாமாவளி குங்கும அர்ச்சனையும், அமாவாசையை முன்னிட்டு அம்மன் ஊஞ்சல் தாலாட்டும் நடந்தது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பகுதியில் உள்ள அங்காள அம்மன் கோவில்களில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி ஊர்வலத்தின் முன்பாக பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்தும், கொரோனாவை காளியம்மன் வதம் செய்வது போன்றும் வேடம் அணிந்து பக்தர்கள் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu