பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு: பெண் தலைவர் பதவி பறிப்பு
பைல் படம்.
ஆரணி டவுன் ஆறுமுகம் தெருவில் உள்ள ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.
இதில் நிர்வாக குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த குமுதவல்லி ,துணைத்தலைவர் சுப்பிரமணி மற்றும் உறுப்பினர்கள் உட்பட 11 பேர் உள்ளனர்.
ஆரணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும் 9000 லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் 5000 லிட்டர் பால் சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு தினமும் அனுப்பப்பட்டு வருகிறது.
கடந்த 2019-20-ம் ஆண்டு இந்த பால் கூட்டுறவு சங்கத்திலிருந்து சென்னைக்கு அனுப்பிய பாலில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டிருந்தது. இதனால் பாலை சென்னை அலுவலகம் திருப்பி அனுப்பியது.
பிரச்சனை வராமல் இருக்க அந்தப் பால் ஆரணி கமண்டல நாக நதியில் ஊற்றி அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக அம்பத்தூர் ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பும் பாலில் தினமும் சுமார் 1000 லிட்டர் வரை தண்ணீர் கலந்து மோசடி செய்து இதன் மூலம் பல கோடி பணம் கையாடல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இதை அடுத்து மாவட்ட கூட்டுறவு சங்க துணை பதிவாளர் மோசடி செய்ய காரணமாக இருந்த செயலாளர் சரவணன், பொறுப்பாளர் பழனி ஆகியோரை சஸ்பெண்ட் செய்தார்.
மேலும் தண்ணீர் கலந்து பால் அனுப்பியதற்காக ஆரணி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு ஆவின் றுவனம் அபராதம் விதித்தது.
இந்நிலையில் ஆவினுக்கு சொந்தமான கடையில் சேல்ஸ்மேன் மூலம் நெய், பால், தயிர், மோர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை, மாட்டு தீவனம், பால் பாக்கெட் விற்பனை செய்தது, மற்றும் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்தது, சங்க விதிகளை மீறி பணம் வாங்கிக்கொண்டு வேலைக்கு அதிகப்படியான ஆட்களை சேர்த்தது என அனைத்திலும் முறையான கணக்குகள் இல்லாமல் அதிகாரிகளின் துணையோடு பல லட்சங்கள் கையாடல் செய்து முறைகேடில் ஈடுபட்டு வரும் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவு, பால்வளத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர், ஆவின் நிர்வாகத்திற்கும் ,நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பாக சென்னை கூடுதல் பால் ஆணையர் உத்தரவின் பேரில் ஆரணி பால் கூட்டுறவு சங்கத்தில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வறிக்கையை கூடுதல் பால் ஆணையருக்கு சமர்ப்பித்தனர்.
அதில் ஆரணி பால் கூட்டுறவு சங்க தலைவர் குமுதவல்லி , நிர்வாக பணிகளை முறையாக மேற்கொள்ளாமலும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பாலில் தண்ணீர் கலந்தும் பணம் கையாடல் என தொடர் முறைகேட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
அறிக்கையின் பேரில் கூடுதல் பால் ஆணையாளர் அவர்கள் பால் கூட்டுறவு சங்க தலைவர் பதவியை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் நிர்வாக குழு செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட இணை பதிவாளர் சந்திரசேகர ராஜா தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu