மக்களவை தேர்தலையொட்டி கொடி அணிவகுப்பு ஊர்வலம்

மக்களவை தேர்தலையொட்டி கொடி அணிவகுப்பு ஊர்வலம்
X

ஆரணியில் நடைபெற்ற கொடி அணி வகுப்பு ஊர்வலம்

ஆரணியில் மக்களவை தேர்தலையொட்டி காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மக்களவை தேர்தலையொட்டி நடந்த காவல்துறை கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி, வேட்புமனு தாக்கல் 20 ஆம் தேதி தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, வரும் 28ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 30ம் தேதி மாலை 3 மணி வரை மனுக்கள் வாபஸ் பெற அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. 30ம் தேதி மாலை 5 மணிக்கு, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

இந்நிலையில், ஆரணி மக்களவை தொகுதியில் தேர்தலின்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை, கலவரங்கள், சமூக விரோத செயல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தவும், காவல் துறை எந்த நேரமும் விழிப்புடன் செயல்படும் என்பதை வெளிப்படுத்தவும், பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் ஆரணியில் நடைபெற்றது.

காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். காவல் ஆய்வாளர் விநாயமூர்த்தி, காவல் உதவி ஆய்வாளர் சுந்தரேசன் முன்னிலை வகித்தனர். முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் நகர காவல் நிலையத்தில் தொடங்கி பழைய, புதிய பேருந்து நிலையம், எம்ஜிஆர் சிலை, காந்தி சாலை, அண்ணா சிலை வழியாக மீண்டும் அதே காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.

இதில், 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர். பேண்ட் இசையுடன் நடந்த காவல்துறை அணிவகுப்பு ஊர்வலத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!