ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்  சாலை மறியல்
X

ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து படவேட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ஊராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ஊராட்சியில் காளிகாபுரம், லிங்காபுரம் செல்லும் சாலையின் குறுக்கே கமண்டல நதியில் தரைப்பாலம் உள்ளது. அந்தத் தரைப்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அங்குத் தரை பாலம் கட்டுவதற்காக ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாலையையொட்டி நிலம், வீடுகள் வைத்துள்ள சிலர் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி கடந்த சில நாட்களாக நடந்தது. அதில் சிலர் தாங்கள் செய்துள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கமண்டல நதியில் உள்ள தரைப்பாலம் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டியதால் அந்த வழியே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த லிங்காபுரம், காளிகாபுரம் பகுதியில் வசிக்கும் பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் படவேடு ஆற்று மேம்பாலத்தில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சந்தவாசல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் நாராயணன், மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். தோண்டப்பட்ட பள்ளத்தை தற்காலிகமாக மண்ணை கொட்டி சமன் செய்து சீரமைக்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்