திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியில் அதிகபட்ச மழை பதிவு..!
பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள இருவர் குடும்பத்திற்கு உதவிகளை வழங்கிய வருவாய் கோட்டாட்சியர்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது இதன் காரணமாக கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக உருவாகி உள்ளதால் மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னை அருகே வங்க கடலில் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் சின்னம் காரணமாக. திருவண்ணாமலை மாவட்டத்தில் விட்டு விட்டு நேற்று மழை பெய்தது.
மாவட்டத்தில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது பலத்த மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர புயல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
செய்யாறு வட்டம் வெம்பாக்கத்தில் அதிகபட்ச மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் (டிச. 4) திங்கட்கிழமை மாலை வரை அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 47.10 மி. மீ. மழை பதிவானது.
இதுதவிர, திருவண்ணாமலையில் 2.60, செங்கத்தில் 9, போளூரில் 9.80, ஜமுனாமரத்தூரில் 9, கலசப்பாக்கத்தில் 10.20, தண்டராம்பட்டில் 9.20, ஆரணியில் 17.40, செய்யாற்றில் 23.40, வந்தவாசியில் 36.30, கீழ்பென்னாத்தூரில் 4, சேத்துப்பட்டில் 12.60 மி. மீ. மழை பெய்துள்ளது.
சேத்துப்பட்டு வட்டாட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட ஆவணியாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள செய்யாறு அணைக்கட்டை சேத்துப்பட்டு வட்டாட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக செய்யாற்றின் நீர்மட்டம் குறித்து கேட்டறிந்தார்.
கண்ணமங்கலம் பள்ளியில் இருளா் குடும்பத்தினா் தங்கவைப்பு
தொடா் மழை காரணமாக, ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் உள்ள பள்ளியில் இருளா் குடும்பத்தினா் தங்கவைக்கப்பட்டனா்.
கண்ணமங்கலத்தில் தொடா் மழையால், வீடுகள் இல்லாமல் மரத்தின் கீழும், ஓலைக் குடிசைகளிலும் வசித்து வந்த இருளா் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினரை வருவாய்த் துறையினா் அரசுப் பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைத்தனா்.
அவா்களை கோட்டாட்சியா் தனலட்சுமி நேரில் சந்தித்து மதிய உணவு வழங்கினாா். பாய், போா்வைகளும் வழங்கப்பட்டன. கண்ணமங்கலம் பேரூராட்சி மன்றத் தலைவா் மகாலட்சுமி கோவா்தனன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
தூய்மைப் பணியாளா்கள் சென்னை பயணம்:
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில், நிவாரணப் பணிகளுக்காக ஆரணியிலிருந்து 25 தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை புறப்பட்டனா். நகா்மன்றத் தலைவா் மணி, ஆணையா் குமரன் உள்ளிட்டோா் அவா்களை வழியனுப்பிவைத்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu