ஆரணியில் தீயணைப்பு படை வீரரின் மனைவி தீயில் கருகி உயிரிழப்பு

ஆரணியில் ஸ்டவ்வை பற்ற வைத்தபோது குபீரென பற்றிய தீயில் கருகி தீயணைப்பு படைவீரரின் மனைவி இறந்தார். காப்பாற்ற முயன்ற தீயணைப்பு படை வீரரும் பலத்த தீக்காயம் அடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருணகிரி சத்திரம் பகுதி கண்ணப்பன் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் ஆரணி தீயணைப்பு நிலையத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி, இவர்களுக்கு விக்னேஷ், ஜெகதீசன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
ஜெயலட்சுமி மண்ணெண்ணெய் பம்பு ஸ்டவ்வில் சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்தார். அப்போது குபீரென தீ வெளியேறி ஸ்டவ் வெடித்த நிலையில் ஜெயலட்சுமி மீது தீ பற்றியது. இதனால் அவர் அலறினார். அருகில் இருந்த கணவர் சரவணன், மனைவியை காப்பாற்ற முயன்றபோது அவரும் பலத்த தீக்காயம் அடைந்தார்.
ஜெயலட்சுமி, சரவணன் ஆகியோரது உடையில் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. சமையல் அறை மிகவும் சிறிதாக இருந்தது. இதனால் இருவராலும் வீட்டைவிட்டு வெளியேற முடியவில்லை. இந்நிலையில் ஜெயலட்சுமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்த ஆரணி தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அதற்குள் 70 சதவீத அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சரவணனை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது சம்பந்தமாக ஆரணி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஜெயலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu