தடுப்பணை ஷட்டர்கள்,போர்க்கால அடிப்படையில் பழுது பார்க்க விவசாயிகள் கோரிக்கை
பழுதடைந்துள்ள தடுப்பணை ஷட்டர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி தற்போது தீவிரமடைந்து வருகிறது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு பருவமழை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக விட்டுவிட்டு பரவலான மழை பெய்து வருகிறது.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று மாலை வரை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது அதிகபட்சமாக ஆரணியில் 28 மி.மீ. மழை பதிவானது.
இதுதவிர, திருவண்ணாமலையில் 2, போளூரில் 10.6, ஜமுனாமரத்தூரில் 17.2, ஆரணியில் 28, செய்யாற்றில் 5, வந்தவாசியில் 3.3, கீழ்பென்னாத்தூரில் 4, வெம்பாக்கத்தில் 23, சேத்துப்பட்டில் 6.8 மில்லி மீட்டா் மழை பதிவானது.
தடுப்பணை ஷட்டா்களை சீரமைக்கக் கோரிக்கை
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி நாக நதியில் அமைந்துள்ள சிங்கிரி கோயில் தடுப்பணை மற்றும் கண்ணமங்கலம் தடுப்பணையில் உள்ள பழுதான ஷட்டா்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
திருவண்ணாமலை மாவட்ட எல்லைகளுக்கு உள்பட்ட பகுதியில் நாக நதி செல்கிறது. ஜவ்வாது மலையில் மழை பெய்தால் அமிா்தி, அரசம்பட்டு, கண்ணமங்கலம் வழியாக நாக நதியில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடும்.
இந்த நீா் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 1933-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் காலத்தில் சிங்கிரி கோயில் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணையிலிருந்து வெளியேறும் நீா் கொளத்தூா் ஏரி நிரம்பி, அதிலிருந்து வெளியேறும் உபரிநீா் கண்ணமங்கலம் ஏரி என தொடா்ச்சியாக 30-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்குச் சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலன் கருதி சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தடுப்பணை ரூ.86 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது. மேலும், கண்ணமங்கலம் ஏரிக்கு ரூ.75 லட்சத்தில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த நிலையில், கண்ணமங்கலம் தடுப்பணை கட்டப்பட்டு சில ஆண்டுகளே ஆன நிலையில் அதன் ஷட்டா்கள் பழுதடைந்து மூடப்பட்டுவிட்டது. இதனால் நதியில் வரும் நீா் ஏரிக்குச் செல்லாமல் வீணாகி வருகிறது. சிங்கிரி கோயில் தடுப்பணையும் ஷட்டா்கள் பல நேரங்களில் திறக்கப்படாமல் மூடி வைத்திருப்பதால் ஏரிகளுக்கு நீா் சரியாக வருவதில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
மேலும், ஏரியில் மீன் ஏலம் எடுத்தவா்களுக்கு சாதகமாக தண்ணீா் திறக்கப்படுகிறது என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் தடுப்பணை ஷட்டா்களை சீரமைக்க அதிகாரிகள் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஏரிகளில் மீன் வளா்க்க ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் விவசாயிகள், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu