எலிக்கு வைத்த விஷத்தால் இறந்த 4 மயில்களை புதைத்த விவசாயி கைது

எலிக்கு வைத்த விஷத்தால் இறந்த 4 மயில்களை புதைத்த விவசாயி கைது
X

 எலிக்கு வைத்த விஷத்தால் இறந்த 4 மயில்களை புதைத்தது தொடர்பாக, வனவர் பாபு, வனக்காப்பாளர் சாம்பசிவம் மற்றும் வனத்துறையினர் வெங்கடேசனிடம் விசாரணை நடத்தினர்.

ஆரணி வனச்சரக பகுதியில் நிலத்தில் எலிக்கு வைத்த விஷத்தால் இறந்த 4 மயில்களை புதைத்த விவசாயி கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வனச்சரகத்திற்குட்பட்ட செய்யாறு அருகே கீழாத்தூர் பகுதியில் விவசாயி வெங்கடேசன் (வயது 55) என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. எலித்தொல்லை அதிகமாக இருக்கவே பயிர் சேதம் ஆகாமல் இருக்க எலிகளை சாகடிக்க விளைநிலத்தில் உணவு தானியங்களோடு விஷத்தை கலந்து வைத்துள்ளார்.

விஷம் கலந்த உணவு தானிய பொருட்களை, 4 மயில்கள் சாப்பிட்டு நிலத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது. இறந்து போன மயில்களை பார்த்த வெங்கடேசன், யாருக்கும் தெரியாமல் நிலத்திலேயே பள்ளம் தோண்டி இறந்த 4 பெண் மயில்களையும் புதைத்தார்.

இச்சம்பவத்தை அறிந்த கீழாத்தூர் கிராம பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலர் சரவணகுமாரிடம் கூறினர். அவர் ஆரணி வனச்சரக அலுவலர் செந்தில்குமாரிடம் தெரிவித்தார். இதையடுத்து வனவர் பாபு, வனக்காப்பாளர் சாம்பசிவம் மற்றும் வனத்துறையினர் வெங்கடேசனிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர், புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்து மயில்கள் வெளியில் எடுக்கப்பட்டது. அங்கேயே மருத்துவர் கவுரிபிரியா இறந்த மயில்களை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் மாவட்ட வன அலுவலர் அருள்நாதன் உத்தரவின்பேரில் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story