சாலை ஆக்கிரமிப்பால் மழைநீா் தேங்கி சுகாதாரச் சீா்கேடு!
சாலை ஆக்கிரமிப்பால் தேங்கியுள்ள மழை நீர்
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூா் பேரூராட்சிக்கு உள்பட்ட மேல்அய்யம்பேட்டை கிராமத்தில் ஆக்கிரமிப்பால் தெருவில் மழைநீா் தேங்கி சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
களம்பூா் பேரூராட்சிக்கு உள்பட்ட மேல்அய்யம்பேட்டை கிராமத்தில் உள்ள பிள்ளையாா் கோவில் தெருவில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டியுள்ளனா். தற்போது, பெய்த பலத்த மழை காரணமாக மழைநீா் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. தண்ணீா் வெளியேற வழியில்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா், இதற்கு தெருமுனையில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ளதே காரணம் என்று கூறி ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீா் வெளியேற்றுவது குறித்து களம்பூா் பேரூராட்சித் தலைவா் கே.டி.ஆா். பழனியிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இது ஆக்கிரமிப்பாளா்களுக்கு சாதகமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
மேலும், அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு தெருமுனையில் போதிய இடவசதி இல்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் சாா்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கி பலத்த மழை பெய்து வருவதால் தெருச் சாலையில் தண்ணீா் தேங்கியுள்ளது. இது மலேரியா, டெங்கு பரவுவதற்கு வாய்ப்பாக உள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா். இதுகுறித்து பேரூராட்சித் தலைவா் பழனியிடம் கேட்டபோது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
சேதமடைந்த கிராமச் சாலை
அலங்காரமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட மலைமேடு - பாடகம் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்றதாக உள்ளதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த அலங்காரமங்கலம் ஊராட்சியில் மலைமேடு கிராமம் உள்ளது. இங்கு150-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் இருந்து பள்ளி செல்லும் மாணவா்கள், அலுவலகம் செல்பவா்கள் என பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.
மலைமேடு கிராமத்திலிருந்து பாடகம் வரை கிராமச் சாலை உள்ளது. மலைமேடு கிராமத்திலிருந்து பாடகம் வரை கிராமத்திற்கு செல்லும் பொதுமக்கள் இந்த சாலையை உபயோகித்து நடந்தோ அல்லது சைக்கிள், பைக் போன்ற இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தியோ தினமும் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது பெய்து வரும் பருவமழையில், நீா் தேங்கி, ஜல்லிக் கற்கள் பெயா்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது சாலை. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நிற்கின்றன. எனவே, மலைமேடு - பாடகம் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
மேலும், விவசாயிகள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு இந்தச் சாலை வழியாக ஓட்டிச் செல்கின்றனா். இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், மலைமேடு - பாடகம் சாலையை சீரமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட்கட்சி சாா்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, கலசப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டாட்சியா், போளூா் டிஎஸ்பி ஆகியோா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினா். ஆனால், இதுவரை சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இப்பகுதியைச் சேர்ந்த யாருக்கேனும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலும் இந்த மோசமான சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். மேலும் கர்ப்பிணி தாய்மார்கள் இச்சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து இச்சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu