ஆரணியில் உள்ள ஓட்டல்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

ஆரணியில் உள்ள ஓட்டல்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
X

ஆரணியில் உள்ள உணவகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் உணவு  பாதுகாப்புத்துறை அதிகாரிகள்

கெட்டுப்போன உணவை விற்பனை செய்வதாக புகார் வந்தால் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் செயல்பட்டு வந்த 7 ஸ்டார் ரெஸ்டாரன்ட் உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக பலியாகினார். மேலும், 30க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனையில் கெட்டுப்போன இறைச்சி உயிரிழப்புக்கு காரணம் என உறுதியானது.

இதனையடுத்து, கடையின் உரிமையாளரான காதர் பாஷா மற்றும் சமையலர் முனியாண்டி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து இருந்தனர். மேலும், ஆரணி சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு உணவகத்தில், உணவுப்பாதுகாப்புத்துறை சார்பாக அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆரணியில் கடந்த 4 நாட்களாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சைவ மற்றும் அசைவ உணவகங்களில் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 4 நாட்களாக பல்வேறு உணவகத்தில் நடைபெற்ற சோதனையில், மொத்தமாக 50 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அங்கேயே அழிக்கப்பட்டுள்ளது.

கெட்டுப்போன இறைச்சியை வியாபாரத்திற்கு தயாராக வைத்திருந்ததாக 18 உணவகத்தின் உரிமையாளர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று ஆரணி அண்ணாசாலை பகுதியில் செயல்பட்டு வரும் அசைவ உணவகத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறும்போது ஆரணியில் உணவகங்கள் நடத்துபவர்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வணிக வளாகங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இறைச்சிகளை நாள்கணக்கில் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கக் கூடாது. கெட்டுப்போன உணவை விற்பனை செய்வதாக புகார் வந்தால் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்