உதவித்தொகை நிறுத்தப்பட்டதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

உதவித்தொகை நிறுத்தப்பட்டதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
X

ஆரணி தாலுகா அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.

ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு உதவித்தொகை நிறுத்தப்பட்டதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாற்றுத்திறனாளி உதவித்தொகை நிறுத்தியதை கண்டித்து தமிழ்நாடு அனைத்து மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமையில் ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் போது மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை விசாரணை என்ற பெயரில் நிறுத்தாதே, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை நிறுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நிறுத்திய நிதி உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆரணி டவுன் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ், சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.ஆரணி வட்ட சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலாஜி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் பேசும்போது இங்கு உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் யாரும் உதவி தொகையை நிறுத்தவில்லை.

ஆன்லைன் மூலம் வருகின்ற பட்டியல் அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் மனு அளியுங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யுங்கள் வருகின்ற ஒன்றாம் தேதி முதல் ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்.

இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புதியதாக பதிவு செய்தால் எப்படி கிடைக்கும், காத்திருப்போர் பட்டியலில் வைப்பார்கள், ஏற்கனவே வழங்கிய உதவி தொகையை நிறுத்தியதற்கான காரணமென எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் தாசில்தார் பாலாஜி மாவட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி வருகிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு ஆரணி வட்டாட்சியர் பெருமாள் மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது அதிகாரிகளே ஆன்லைன் மூலம் பதிவு செய்து உங்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பார்கள் என பதிலளித்து, உதவித்தொகை நிறுத்தப்பட்டதற்கான விளக்க கடிதம் வழங்குவதாக உறுதி அளித்தனர்.

அதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!