விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட அலுவலரை கண்டித்து தர்ணா

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
நேரடி நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட அலுவலரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாணார்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ரஞ்சித், பிரேம்குமார், சுப்பிரமணி உள்பட 6 பேர் அரியப்பாடி கிராமத்தில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் மையத்தில் தங்களது நெல்லை விற்பனை செய்வதற்காக டிராக்டரில் 115 மூட்டைகளை ஏற்றி சென்றனர்.
மேலும் பணியில் இருந்த அதிகாரிகள் நெல் எடை போடுவதற்கு ஒரு மூட்டைக்கு ரூ.100 லஞ்சமாக கொடுத்தால் உடனே எடை போடுகிறோம் என்று விவசாயிகளிடம் கேட்டுள்ளனர். இதனை கேட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனை கண்டித்து விவசாயிகள் டிராக்டரில் நெல் மூட்டைகளுடன் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் விவசாயிகள் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் இருக்கையில் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் அதிகாரிகள் வரும் வரையில் காத்திருக்க போவதாக தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் அலுவலகத்தில் இருந்த உதவி அலுவலர்கள் அங்கு வந்து வருவாய் கோட்டாட்சியர் நேரடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து சென்றனர்.
கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் பிடித்தம் செய்த கரும்பு பயிர் கடனுக்கு விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் விவசாய கிளையை கண்டித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வங்கி முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க தலைவர் பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் உரையாற்றினார்.
போராட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு அனுப்பிய நோட்டீசை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு கரும்பு பயிர் கடன் இல்லை என்ற தடையில்லா சான்று வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
முடிவில் ராம கவுண்டர் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu