கும்பாபிஷேகத்தையொட்டி தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் பாலாலயம்

கும்பாபிஷேகத்தையொட்டி தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் பாலாலயம்
X

தேவிகாபுரம் பெரியநாயகியம்மன் கோவில் பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பாபிஷேகம் நடக்க இருப்பதையொட்டி தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் பாலாலயம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் பழமை வாய்ந்த பெரியநாயகியம்மன் சமேத கனககிரீஈஸ்வரர் கோயில் உள்ளது. கனககிரீஸ்வரருக்கு மலை மீது கோயிலும், பெரியநாயகியம்மனுக்கு ஊருக்கு மத்தியில் கோயிலும் உள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கோபுர அழகு என்றால் தேவிகாபுரம் பெரியநாயகியம்மன் சமேத கனககிரீஸ்வரருக்கு மதில் அழகு ஆகும். மலை மீது உள்ள கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரால் அபிஷேகம் நடப்பது சிறப்பு ஆகும். மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி கோவில் சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அம்பாள் ஈசனை சரிபாதியாக அடைவதற்கு இந்த இடத்தில் தவம் இருந்ததால் திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்தால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. அம்பாளின் தவத்தில் மயங்கிய சிவன் பங்குனி உத்திரத்தன்று, மலையில் இருந்து கீழே இறங்கி வந்து அம்பாளை திருமணம் செய்தார் என்பது ஐதீகம்.

இந்த சிறப்பு வாய்ந்த கோயில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு 2003ம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது இந்த கோயிலை மீண்டும் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு இந்து அறநிலைத்துறை சார்பில் ரூ.1 ௧ோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

காலை கோயில் வளாகத்தில் யாக சாலை அமைத்து கலசங்கள் வைத்து பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் மூன்று கால பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் மலை மீது உள்ள கனககிரீஸ்வரர் மற்றும் பெரியநாயகியம்மன் கோயில் மூலவர்கள் தவிர ராஜ கோபுரம் கிளி கோபுரம் மற்றும் பரிவார தேவதைகள் அனைத்திற்கும் அத்திப்பலகை கலஷாபிஷேகம் தீபாராதனை நடந்தது.

இதில் செய்யார் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர், மாவட்ட செயலாளர் தரணி வேந்தன், ஆரணி எம். எல். ஏ. சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவர் சேகரன், மாவட்ட அறங்காவல் நியமனக்குழு உறுப்பினர் பாண்டுரங்கன், மண்டல இணை ஆணையர் சுதர்சன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் முத்துசாமி செயல் அலுவலர் சிவாஜி, ஆரணி நகராட்சி தலைவர் ஏ.சி. மணி திருக்கோயில் நிர்வாகத்தினர் தேவிகாபுரம் கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story