ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கணவன், மனைவி தீக்குளிக்க முயற்சி

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  கணவன், மனைவி தீக்குளிக்க முயற்சி
X

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற கணவன், மனைவியை போலீசார் விரைந்து தடுத்து நிறுத்தினர்

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் அப்பநல்லூர் ஊராட்சியில் புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை (வயது 64), மாற்றுத்திறனாளி. இவரின் மனைவி லட்சுமி (58). இவர்களின் வீட்டின் முன்பு சாலை சரியாக இல்லை. இதனால் அப்பகுதி முழுவதும் முறம்பு மண் கொட்டி சாலையை சீர் செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், அந்தப் பகுதியில் சாலையை மேம்படுத்துவதற்காக முறம்புமண் கொட்டப்பட்டு இருந்ததை 100 நாள் வேலை திட்டத்தில் அகற்றியதாக தெரிகிறது. இதுதொடர்பாக கேட்டதற்கு, அந்த இடத்தில் சாலை வருகிறது. இதனால் முறம்பு மண்ணை அகற்றினோம், எனப் பதில் அளித்துள்ளனர்.

நேற்று பலத்த மழை பெய்ததால், அப்பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பிச்சையும், அவரின் மனைவியும் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து வார்டு உறுப்பினர் சோமசுந்தரம், ஊராட்சி தலைவரிடம் கேட்டதற்கு சரிவர பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில் இன்று மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு லட்சுமியும், அவரின் கணவர் பிச்சையும் தீக்குளிப்பதற்காக மண்எண்ணெய் கேனுடன் வந்தனர். அவர்கள் வருவதற்கு முன்பு தகவல் அறிந்த ஆரணி டவுன் போலீசார் அங்கு வந்ததால் லட்சுமி கொண்டு வந்த மண்எண்ணெய் கேனை பறித்துக் கொண்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவி மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வராண்டாவில் படுத்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தருமன், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்.சுப்பிரமணி, எஸ்.சவிதா, மேற்கு ஆரணி ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், ஒன்றிய குழு துணைத் தலைவர் ஆ.வேலாயுதம் மற்றும் கணவன், மனைவியை வரவழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் அந்த இடத்துக்கு புதிதாக சாலை வருவது உறுதி தான். அந்தச் சாலையை உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் தாக்கப்பட்டதாக சொல்கிறீர்கள், அதற்காக நீங்கள் கண்ணமங்கலம் போலீசில் செய்து கொள்ளலாம், எனக் கூறினார்.

Tags

Next Story