கல் குவாரி பிரச்னை குறித்து சமரசக் கூட்டம்

தாசில்தார் தலைமையில், சமரசக் கூட்டம் நடந்தது.
ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் கிராம கல் குவாரி பிரச்னை சம்பந்தமாக, ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் சமரசக் கூட்டம் நடந்தது.
ஆரணியை அடுத்துள்ள முள்ளண்டிரம் கிராமத்தில், அரசுக்குச் சொந்தமான மலைப்பாறை உள்ளது. முள்ளண்டிரம் கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்காக அரசு ஒப்பந்தம் விடப்பட்டது. அதனை வேலூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஏலம் எடுத்தார். சில தினங்களுக்கு முன்பு பாறையை உடைக்கும் பணியை தொடங்கியபோது, கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால், பணிகள் நிறுத்தப்பட்டன . மேலும் சாலை மறியலில். மக்கள் ஈடுபட்டனர்.
இதுதொடா்பாக, கிராம மக்கள் பாறையை உடைக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், கோட்டாட்சியா் தனலட்சுமி, வட்டாட்சியா் மஞ்சுளா ஆகியோரிடமும் மனு அளித்தனா்.
இந்நிலையில், நேற்று ஒப்பந்ததாரா் பாறையை உடைக்கும் பணியை மீண்டும் தொடங்கியபோது, பணிகளை நிறுத்தக் கோரி, முள்ளண்டிரம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து ஆரணி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மஞ்சுளா தலைமையில் ஏலம் எடுத்தவர் மற்றும் பொதுமக்கள் என இருதரப்பினரும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், கிராம மக்கள் சாா்பில், ஊராட்சி மன்றத் தலைவா் பழனி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயபிரகாஷ், வழக்குரைஞா் வெங்கடேசன் மற்றும் பாறையை சுற்றியுள்ள வீடுகளின் உரிமையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, பாறை ஒப்பந்ததாரா் சரவணன், அவருக்கு ஆதரவாக குன்னத்தூா் ரவி, வழக்குரைஞா் பாா்த்திபன் ஆகியோா் பங்கேற்றனா். பேச்சுவாா்த்தையின்போது, ஒப்பந்ததாரா் சரவணன் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் என்னால் தொடர்ந்து தொழில் செய்ய முடியவில்லை. ஒப்பந்தம் காலம் விரைவில் முடிகிறது. ஆகையால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லாமல் நாங்கள் பாறை உடைத்து எடுத்துக் கொள்கிறோம். நாணல் டெக்னாலஜி மூலம் பாறைகளை உடைப்பதால் பாறைகள் வெளியில் சிதறாது. யாருக்கும் பாதிப்பு இருக்காது, என்றார்.
பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு;
பாறையில் வெடி வைத்து தகா்க்கும்போது வீடுகள், விவசாயக் கிணறுகளில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுவதுடன், பாறை துகள்கள் விழுந்து பொதுமக்களும், கால்நடைகளும் காயமடைகின்றனா். எனவே, பாறையை உடைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
தொடர்ந்து ஒப்பந்ததாரா் சரவணன் கூறுகையில், அரசு விதிகளை பின்பற்றி, பாதிப்புகள் ஏற்படாத வெடிகளை பயன்படுத்தி பாறைகளை உடைத்துக்கொள்கிறோம். இதற்கு கிராம மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனா்.
இரு தரப்பு கோரிக்கைகளையும் கேட்டறிந்த வட்டாட்சியா் மஞ்சுளா, இது தொடா்பாக கோட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். முடிவு எதுவும் எடுக்கப்படாமல் இந்தக் கூட்டம் நிறைவடைந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu