ஏலச்சீட்டு நடத்துவதாக ரூ. 3.50 லட்சம் மோசடி செய்த சேலை வியாபாரி கைது

ஆரணி அருகே சீட்டு நடத்தி கூலி தொழிலாளியிடம் ரூ. 3.50 லட்சம் மோசடி செய்த பட்டுச்சேலை வியாபாரியை போலீசார் கைது செய்தனர். அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் . இவரும், இவரது மனைவி வெண்ணிலாவும் சொந்த வீட்டில் பட்டுச் சேலை வியாபாரம் செய்து கொண்டு மாதச் சீட்டு நடத்தி வந்தனர்.
இவர்கள் தாங்கள் நடத்தும் சீட்டில் சேர்ந்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி வாடிக்கையாளர்களை சேர்த்து சந்தா வசூலித்துள்ளனர்..
இவர்களுடைய பேச்சை நம்பி ஆரணி தாலுகா லட்சுமி நகர் டேங்க் தெருவை சேர்ந்த பரசுராமன் என்ற கூலி தொழிலாளி பணம் கட்டி உள்ளார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம சங்கர் தம்பதியிடம் 10 நபர்கள் கொண்ட ஒரு லட்சம் ரூபாய் ஏலச்சீட்டில் சீட்டில் சேர்ந்து உள்ளார். மேலும் இவர் ரூ.60 ஆயிரம், ரூ.75 ஆயிரம், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் சீட்டு திட்டத்திலும் சேர்ந்து சந்தா செலுத்தி வந்துள்ளார்.
சீட்டு முடிவடைந்ததும் பரசுராமன், சங்கரிடம் சென்று சீட்டு பணத்தை கேட்டு உள்ளார். அதற்கு சங்கர், எங்களுக்கு பணம் தேவை உள்ளது. உங்களுடைய சீட்டு பணத்தை பிறகு தருகிறேன் என்று கூறியுள்ளார்.
பின்னர் பரசுராமனிடம் சங்கர் மற்றும் அவரது மனைவி வங்கி காசோலைகள் மற்றும் கையெழுத்திட்ட பாண்டுகள் கொடுத்துள்ளனர்.
ஆனால் பரசுராமனுக்கு அவர் கட்டிய சீட்டு பணத்தை தரவில்லை அவருக்கு தரவேண்டிய 3 லட்சத்து 51 ஆயிரத்து 760 தராமல் ஏமாற்றியுள்ளனர்.
மேலும் சங்கர் மற்றும் அவரது மனைவியும் ஆரணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பலரிடம் சீட்டு பணம் வசூல் செய்து கொண்டு பல லட்சம் ரூபாய் திருப்பி தராமல் ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டனர்.
தான் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்த பரசுராமன், இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் புகார் மனு அளித்தனர். பின்னர் அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சங்கரும், அவரது மனைவி வெண்ணிலாவும் சீட்டு நடத்தி பணம் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சங்கரை கைது செய்தனர். மேலும் அவரது மனைவி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
கைது செய்யப்பட்டு உள்ள சங்கரிடம் சீட்டு பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட நபர்கள் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தை அணுகலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu