நிரம்பி வரும் செண்பகத்தோப்பு அணை: ஆரணி, போளூா் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
செண்பகத்தோப்பு அணை
ஆரணி அருகேயுள்ள படவேடு செண்பகத்தோப்பு அணை நிரம்பி வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீா் திறக்கப்பட உள்ளது.
அதனால், கமண்டல நாக நதி கரையோரத்தில் வசிக்கும் ஆரணி, போளூா் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், படவேடு அருகே செண்பகத்தோப்பு கிராமப் பகுதி கமண்டல நாக நதியில் செண்பகத்தோப்பு அணை அமைந்துள்ளது. இந்த அணை மூலம் போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் ஆற்காடு வட்டங்களில் உள்ள 48 ஏரிகளின் வாயிலாக சுமாா் 8350.40 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையின் நீா்மட்ட உயரம் 62 அடி ஆகும்.
இதன் முழுக்கொள்ளளவு 287.20 மி.க. அடியாகும். இந்த அணையில் திங்கள்கிழமை நிலவரப்படி 55.37 அடி உயரத்திற்கு தண்ணீா் உள்ளது.
தற்போது, அதிகப்படியான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் செண்பகத்தோப்பு அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கக்கூடும். அணையின் நீா்மட்டம் உயரும் பட்சத்தில் நீா்வரத்துக்கேற்ப அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்படும்.
எனவே, அணையின் உபரிநீா் செல்லும் கமண்டல நதிக் கரையோர கிராமங்களான படவேடு, மல்லிகாபுரம், புஷ்பகிரி, சந்தவாசல், ராமநாதபுரம், ஆரணி பகுதி ஆற்றின் இரு கரைகளில் தாழ்வான பகுதியில் வசிப்பவா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போளூா் பொதுப்பணித் துறையினா் தெரிவித்துள்ளனா்.
நந்தன் கால்வாய்
திருவண்ணாமலை மாவட்டம், துறிஞ்சல் ஆற்றில் கீரனுாரில் உள்ள அணைக்கட்டில் இருந்து நந்தன் கால்வாய்க்கு தண்ணீர் வருகிறது. துறிஞ்சல் ஆற்றின் அணைக்கட்டு நிரம்பி தண்ணீர் ஆற்றில் செல்கிறது.
ஆற்றில் தண்ணீர் வீணாக சென்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து நந்தன் கால்வாய் குழுவினர் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து நந்தன் கால்வாய்க்கு தண்ணீர் வரும் ஷெட்டர்களை திருவண்ணாமலை மாவட்ட நீர்வளத்துறையினர் திறந்தனர். தற்போது நந்தன் கால்வாயில் நீர் வரத்து துவங்கியுள்ளது. இந்த நீரானது ஏரிகளுக்கு நேரடியாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல கலசப்பாக்கம் அடுத்த மிருகண்டா நதி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் நீர் வரத்துக்கேற்ப அணையில் இருந்து நீர் வெளியேற்ற வாய்ப்புள்ளது. கலசப்பாக்கம் கரையோர பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க கிராம நிர்வாக அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu